கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை பூசாரி உட்பட ஊழியர்கள் திருடிய விவகாரத்தில் உதவி ஆணையர் உட்பட 8 பேர் பணிநிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பெரிய கடைவீதியில் அமைந்துள்ள, கோவையின் காவல் தெய்வமாக பக்தர்களால் கருதப்படும் கோனியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 9 நிரந்தர உண்டியல்களும், கோயில் திருப்பணி மற்றும் சமீபத்தில் நடைபெற்ற தேரோட்ட விழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட 7 தற்காலிக உண்டியல்களும் என மொத்தம் 16 உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டுப் பணம் எண்ணும் பணிகள் நடைபெற்றன. அப்போது, ஒரு உண்டியலை மட்டும் தனியாக எடுத்து வைத்து, அதில் இருந்த காணிக்கைப் பணத்தைச் சிலர் திருடியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைக் கண்ட பக்தர் ஒருவர், சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைத் தலைமையகத்தில் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஒரு உண்டியலை எண்ணாமல் அதில் இருந்த சுமார் ரூ.30,000 பணத்தைக் கோயிலில் பணிபுரிந்த பாலசுப்பிரமணியன், சரவணன், பிரதீப் குமார் மற்றும் கோயில் பூசாரி கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேர் கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பூசாரி உள்ளிட்ட 4 பேரையும் காவல்துறையினர் நேற்றைய தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், இத்திருட்டுச் சம்பவத்தைக் கண்டறியாமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி, கோயில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உஷா நந்தினி, கோயில் செயல் அலுவலர் குமார், சரக ஆய்வாளர்கள் ராம்குமார் மற்றும் உதயகுமார் ஆகிய 4 அதிகாரிகள் உள்ளிட்ட 8 பேரையும் பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோயில் உண்டியல் பணம் திருடப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
