மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மீண்டும் செக் வைத்த மத்திய அரசு!

Published On:

| By Pandeeswari Gurusamy

Chennai Metro Rail

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என தமிழ்நாடு அரசுக்கு மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சென்னையைத் தொடர்ந்து மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் 4 மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழக அரசு திட்டமிட்டது. கோவையில் 39 கிலோமீட்டர் தொலைவிற்கு, அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் உயர்மட்டப் பாதையில் மெட்ரோ ரயில் இயக்கும் நோக்கில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT

இதேபோல், மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31.9 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டது. இதில் 27 கிலோமீட்டர் உயர்மட்டப் பாதையில் 23 மெட்ரோ ரயில் நிலையங்களும், 4.65 கிலோமீட்டர் சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்க அரசு திட்டமிட்டது.

கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையைச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாரித்து மாநில அரசிடம் வழங்கியது. இதையடுத்து, இத்திட்டங்களைச் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தது. மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் திட்டங்களைச் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, மாநில அரசு வாயிலாக மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. அதில், மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் குறைந்தது 20 லட்சம் மக்கள் தொகை தேவை என்றும், கோவை மற்றும் மதுரையில் 15 லட்சம் மக்கள் தொகை மட்டுமே இருப்பதால் அனுமதி அளிக்க முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.

முன்னதாக, இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ நிறுவனத்திற்கு மத்திய அரசு திருப்பி அனுப்பியபோது, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மாநகரங்களிலேயே மெட்ரோ திட்டம் சாத்தியம் என்பதற்கான ஆவணங்கள் கோரப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்களை அமைக்கக் கோரி கடந்த மே மாதம் தமிழக அரசு மீண்டும் அறிக்கை செய்திருந்த நிலையில், தற்போது அக்கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தும் அளவிற்கு மக்கள் தொகை இல்லை என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்குத் தெரிவித்துள்ளது. மேலும், மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ திட்டம் அமைவதால் பெரிய அளவில் பயனடைய வாய்ப்பில்லை என்றும், அதற்குப் பதிலாகப் பேருந்து போக்குவரத்து நடைமுறையை மேம்படுத்தலாம் என்றும் மத்திய அரசு தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

முன்னதாக சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டுமுதல் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரு வழித் தடங்களில் இயக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் நான்கு வழித் தடங்களில் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share