நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை சீரமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்த்திருத்தங்களை உன்னிப்பாக கண்காணிப்போம் என்று உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 24) கூறியுள்ளது.
கடந்த மே 3ஆம் தேதி நடந்த நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்தததால் மறுத்தேர்வு நடைபெற்றது. இந்தநிலையில் நீட் தேர்வு வினாத்தாள் லீக் ஆனதை கண்டித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் நீட் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக ஐக்கிய மருத்துவர்கள் முன்னணி சங்கம் மனு தாக்கல் செய்தது. அதில், ’நீட் தேர்வை நடத்துவதில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. அதுபோன்று தேசிய தேர்வுகள் முகமையில் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை செய்யக் கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 24) விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் அரசு தீவிரமாக உள்ளது. நீதிபதிகள் பரிந்துரைக்கும் எந்தவொரு பரிந்துரையையும் எவ்வித தயக்கமும் இன்றி செயல்படுத்தப்படும்” என்று உறுதி அளித்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள், ”தற்போதைய தேர்வில் நடந்துள்ள பிரச்சனைக்கு மட்டும் தீர்வு காண்பது நீதிமன்றத்தின் நோக்கம் அல்ல. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு தேர்வு முறையிலேயே நிரந்தரமான, வலுவான சீர்திருத்தங்களை உருவாக்குவதுதான் நீதிமன்றத்தின் நோக்கம்” என்று குறிப்பிட்டனர்.
தொடர்ந்து, ”ஓய்வுபெற்ற இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் குழு பரிந்துரைத்த சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று நீதிபதி பி.எஸ்.நரசிம்மா உத்தரவிட்டார்.
தேசிய தேர்வு முகமையை நிர்வகிக்க ஒரு ‘ஆளும் வாரியம்’ உருவாக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையைக் குறிப்பிட்ட நீதிபதி, அதில் வெளிப்படைத்தன்மை, அதிகாரிகள் நியமனம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரின் பிரதிநிதித்துவம் ஆகியவை தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுமாறு அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும் ”நீட் தேர்வு பிரச்சினைகளில் எடுக்கப்படும் தற்காலிக நடவடிக்கை, நிரந்தர தீர்வாக இருக்க முடியாது. இத்தனை ஆண்டுகளாக தற்காலிகத் தீர்வுகளை மட்டுமே நம்பியிருந்ததுதான் நமக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது” என்றும் குறிப்பிட்டார்.
இதையடுத்து மத்திய அரசு ஏற்கனவே தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் விவரங்கள் முழுமையாக இடம்பெறவில்லை என்பதால், அனைத்து விவரங்களையும் அடக்கிய புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்வதாகச் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உறுதியளித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “நாங்கள் இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கண்காணிப்போம். சீர்திருத்தங்கள் முழுமையாக நிறுவனமயமாக்கப்படுவதை உறுதி செய்ய ஆண்டு முழுவதும் கண்காணிப்போம்” எனக் கூறி விசாரணையை ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
