தூத்துக்குடியில் லாக்அப் மரணமா? காவல்துறை விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக கைது செய்யப்பட்ட இளைஞர், காவல்துறையினர் அடித்ததில் மரணம் அடைந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ள நிலையில் நடந்த சம்பவம் குறித்து காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் (வயது 26), அப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் பணியாற்றி வந்தார். அவர் டாஸ்மாக்கிலிருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து, கடை அடைத்த பிறகு கூடுதல் விலைக்கு விற்று வந்ததாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 17-ஆம் தேதி காலை அருணாச்சலம் கைது செய்யப்பட்டார். அன்று மாலை அவர் உடலில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். காவல்துறை அடித்ததாக அருணாச்சலம் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.

போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.

ADVERTISEMENT

காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த 17.07.2026 அன்று, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில், தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (24) என்பவர் மதுவிலக்கு அமலாக்க சோதனையின் போது 180 மில்லிலிட்டர் அளவிலான 120 மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக வைத்திருந்தது கண்டறியப்பட்டதால், தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய குற்ற எண். 751/2026 ச/பி தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் பிரிவுகள் 4(1)(A) மற்றும் 14 -ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட பின்னர், சட்டப்படி பின்பற்றப்பட வேண்டிய அனைத்து நடைமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்பட்டன. அவரது உடல் சோதனையானது, காணொளி பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட விபரம் அவரது குடும்பத்தினருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 17.07.2026 அன்று மாலை சுமார் 5.50 மணியளவில், அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டது. பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தகுதியுடையவர் என சான்றளித்ததுடன், அவரது உடலில் எந்தவித வெளிப்புறக் காயங்களும் இல்லை என்றும் மருத்துவ சான்றிதழில் சான்றளித்தார்.

மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக அவர் மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அப்போது காவல் நிலையத்தில் இருந்த பிற கைதிகளுடன் காவல் நிலைய லாக்-அப்பில் வைக்கப்பட்டார். லாக்-அப்பில் இருந்த போது, மற்ற கைதிகளுடன் இயல்பாக நின்று பேசிக் கொண்டிருந்த அவர், திடீரென தானாகவே மயங்கி கீழே விழுந்தார். இச்சம்பவம் லாக்-அப்பின் முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் உடனடியாக அவருக்கு தேவையான உதவிகளை செய்து, குடிநீர் வழங்கி, பாதுகாப்பாக அமர வைத்தனர். காவல் நிலைய வரவேற்பு பகுதியிலிருந்த அவரது தாயாரும் உடனடியாக அழைக்கப்பட்டார். அதன்பின்னர், அவரது உடல்நிலை இயல்பாக இருந்ததால், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவரை ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, தொடர் மருத்துவப் பரிசோதனைக்காக அவரது உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

அதன்பின்னர், மருத்துவமனை அருகே அவர் மீண்டும் மயங்கி விழுந்ததாக அவரது உறவினர்கள், காவல்துறையினருக்குத் தெரிவித்தனர். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சையின் போது, அவருக்கு மருத்துவ நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல், 23.07.2026 அன்று அவர் இறந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக, அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி விசாரணை நடைபெற்று வருகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அருணாச்சலம் மயங்கி விழுந்த வீடியோவையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share