கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களின் நிலை தொடர்பாக மக்களவையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் கோவை- மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தமிழக எம்.பிக்கள் கேள்வி எழுப்பினர்.
தமிழக எம்.பி.க்களின் கேள்வி:
- மதுரை கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் அந்நகரங்களில் 20 லட்சம் மக்கள் தொகை இல்லை என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டதா?
- ஆக்ரா போபால் இந்தூர் மற்றும் நாக்பூர் போன்ற ஒப்பிடத்தக்க நகரங்களில் அல்லது குறிப்பிட்ட வரையறைகளை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட வட மாநில நகரங்களில் மெட்ரோ திட்டங்களை அங்கீகரிப்பதற்கான அளவுகோல்கள் எவை?
- 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டே இப்போதும் முடிவெடுக்கப்படுகிறதா?
- தற்போதைய மக்கள் தொகை உயர்வு கணக்கில் கொள்ளப்படுவது இல்லையா?
- பயணிகளின் எண்ணிக்கை குறித்த கணிப்புகள் சுய மதிப்பீடா அல்லது மூன்றாம் தரப்பு மதிப்பீடா?
- திட்டங்கள் நிராகரிக்கப்படுவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதா? 50:50 என்ற விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிதி திட்டங்கள் ஏற்கப்படவில்லையா?
- பிற பகுதிகளிலும் இதே அணுகுமுறை கையாளப்பட்டுள்ளதா? இல்லையெனில் இது புது அணுகுமுறையா?
- மக்கள் மத்தியில் மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்படாமல் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிற பின்னணியில் அரசின் முடிவு மறு பரிசீலனை செய்யப்படுமா?
மத்திய அரசின் பதில்: இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைக்கான இணை அமைச்சர் ஸ்ரீ தோக்கன் சாகு அளித்த பதில்:
- நகர்ப்புற வளர்ச்சி மாநிலங்களின் அதிகார பட்டியலில் வருவதால் அவர்களே திட்டங்களை உருவாக்கி தருகிறார்கள். அந்த முன்மொழிவுகளை ஆராய்ந்த பிறகு முடிவெடுக்கப்படுகிறது.
- ஒரே ஒரு அளவுகோலின் அடிப்படையில் மட்டும் முடிவுகள் அமைய வேண்டியதில்லை. திட்ட அமலாக்கத்திற்கான சாத்திய கூறுகள், வளங்களை திரட்டும் வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவெடுக்கப்படுகிறது.
- திட்டங்களை அங்கீகரிப்பதற்கு எந்த நிலையான காலக்கெடுவையும் நிர்ணயம் செய்ய முடியாது.
- தமிழ்நாடு அரசு மதுரைக்காக சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையில் மதுரை மக்கள் தொகை 15 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இது 10.84 லட்சம்தான்.
- கோவையை பொருத்தவரையில் பயணத்தின் குறைந்த சராசரி தூரங்கள் (low average trip lengths) மற்றும் சாலைகளில் உள்ள தற்போதைய சராசரி வேகங்களைக் கருத்தில் கொண்டு, மெட்ரோ அமைப்புக்கு மாறுவதால் ஏற்படும் போக்குவரத்து மாற்றம் (modal shift) மிகக் குறைவான நேர சேமிப்பை மட்டுமே அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கோயம்புத்தூர் மாநகராட்சி (CMC) பகுதி மற்றும் உள்ளூர் திட்டமிடல் பகுதி (LPA) ஆகியவற்றின் மக்கள் தொகை, முன்மொழியப்பட்ட மெட்ரோ அமைப்பால் சேவை செய்ய கடினமாக உள்ளது. ஏனெனில், உள்ளூர் திட்டமிடல் பகுதியில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை, முன்மொழியப்பட்ட மெட்ரோ அமைப்புக்கு சேவை செய்யப்பட உள்ள CMC பகுதியை விட 5 மடங்கு பெரியதாகும்.
- கோயம்புத்தூரில் 34 கி.மீ.க்கான முன்மொழியப்பட்ட வலைப் பின்னலில் ஒரு நாளைக்கான பயணிகளின் எண்ணிக்கை 5.9 இலட்சமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
- இது சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டத்தின் (Phase-1) 54.10 கி.மீ. செயல்பாட்டு வலைப் பின்னலில் ஒரு நாளைக்கு 4 இலட்சமாக உள்ள தற்போதைய பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் ஒரு பெரிய மக்கள்தொகைக்குச் சேவை செய்கிறது. எனவே, விரிவான திட்ட அறிக்கையில் திட்டமிடப்பட்டுள்ள பயணிகளின் எண்ணிக்கை யதார்த்தமானதாக இல்லை.
- பல இடங்களில், போதுமான நிலம் (Right of Way – RoW) கிடைக்காததால் கட்டுமான நிலையங்களை (construct station) அமைக்கச் சாத்தியமில்லை. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
