நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து, வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்படும் வரிசை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, ஜூலை 28-ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தலைமை வகிக்கவுள்ள நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார். இந்த ஆண்டு மொத்தம் 37,877 மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்நிலையில், விழாவில் பாடல்கள் இசைக்கப்படும் வரிசை குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் சந்திரசேகர் கூறுகையில், “பட்டமளிப்பு விழாவில் முதலில் ‘வந்தே மாதரம்’, இரண்டாவதாக ‘தேசிய கீதம்’, மூன்றாவதாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இசைக்கப்படும். விழா நிறைவடையும் போது முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டு, நிறைவாகத் தேசிய கீதம் இசைக்கப்படும்.
இது ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால், ஆளுநர் மாளிகையிலிருந்து எங்களுக்குத் தெளிவான மற்றும் கண்டிப்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் பங்கேற்கும் விழாக்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையைச் சரியாகப் பின்பற்றாவிட்டால் பல்கலைக்கழகத்தின் மீது நடவடிக்கை (Penal action) பாயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பல்கலைக்கழகம் இந்த வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி விழாவை நடத்தத் தயாராக உள்ளது. பல்கலைக்கழகத்தின் ஒழுங்கைச் சீர்குலைக்க முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; இதற்கு காவல்துறையும் முழு ஒத்துழைப்பு அளிக்கும்.” இவ்வாறு துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
