நாடாளுமன்றத்தில் இன்று ’வந்தே மாதரம்’ – சிறப்பு விவாதம்: ஆங்கிலேயர் எதிர்ப்பு பாடலா? இஸ்லாமியருக்கு எதிரானதா?

Published On:

| By Mathi

Vande Mataram Article

நாடாளுமன்றத்தில் இன்று (டிசம்பர் 8) ‘வந்தே மாதரம்’ (Vande Mataram- Parliament) பாடல் வெளியாகி 150 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, மக்களவையில் இந்த விவாதத்தை தொடங்கி வைக்கிறார்.

வந்தே மாதரம்- பொதுக் கருத்து

ADVERTISEMENT
  • இந்தியாவின் தேசியப் பாடலாக போற்றப்படுகிறது வந்தே மாதரம்.
  • பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரம் பாடல் முதல் முதலாக 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ந் தேதி பங்காதர்ஷன் என்ற இலக்கிய இதழில் வெளியிடப்பட்டது.
  • வந்தே மாதரம் பாடல் வெளியிடப்பட்டு கடந்த நவம்பர் 7-ந் தேதியுடன் 150 ஆண்டுகள் நிறைவடைந்தது.
  • பங்கிம் சந்திர சட்டர்ஜியின் 1882-ம் ஆண்டு ஆனந்த மடம் நாவலிலும் வந்தே மாதரம் பாடல் இடம் பெற்றுள்ளது.
  • வந்தே மாதரம் பாடலுக்கு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்துள்ளார்
  • நாட்டின் ஒருமைப்பாடு, தியாகம், பக்தி ஆகியவற்றை வலியுறுத்துகிறது வந்தே மாதரம் பாடல்.
  • வந்தே மாதரம் பாடலில் இந்து தெய்வங்கள் குறித்து இடம் பெற்றிருந்ததால் மதச்சார்பற்ற ஜன கண மன பாடல், நாட்டுப் பண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டது
  • வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவை நாடு முழுவதும் கொண்டாட அக்டோபர் 1-ந் தேதி நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்தது.

வந்தே மாதரம் பாடலின் நிஜ முகம் என்ன?

திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க.ராசேந்திரன், அந்த இயக்கத்தின் அதிகாரப்பூர்வ வார ஏடான பெரியார் முழக்கத்தில் (2016) எழுதிய கட்டுரையில் இடம் பெற்றுள்ள விவரங்கள்:

ADVERTISEMENT

‘வந்தே மாதரம்’ பாடலின் வரலாறு என்ன? எந்த சூழ்நிலையில் எந்தக் கருத்தை முன் வைத்து அது பாடப்பட்டது?

  • பக்கிம் சந்திர சட்டர்ஜி எனும் பார்ப்பனர் 1880இல் ‘ஆனந்த மடம்’ என்று ஒரு நாவலை வங்காள மொழியில் எழுதினார். அந்த நாவலில் வரும் வங்காள மொழிப் பாடல்தான் ‘வந்தே மாதரம்’.
  • அந்த நாவல் உருவான காலக்கட்டத்தில் இந்தியாவின் சில பகுதிகளில் ஆட்சி செய்து கொண்டிருந்த முஸ்லிம் மன்ன ருடன் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி யினர் சில சமாதான ஒப்பந்தங்களை செய்து கொண்டு சென்னை – பம்பாய் – கல்கத்தா போன்ற நகரங்களில் காலூன்ற முயன்று கொண்டிருந்தனர்.
  • அன்றைய சூழலில் – இந்த ‘ஆனந்த மடம்’ நாவலில் சொல்லப்பட்ட செய்தி என்ன? ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும் என்பது அல்ல; மாறாக முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியை – ஆயுதப் போர் நடத்தி ஒழித்துவிட்டு இந்து – ஆங்கிலேயர்களின் கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும். இதுவே இந்த நாவலின் மய்யக் கருத்து.
  • வைணவ இந்து இளைஞர்கள் – ஆயுதம் தாங்கிப் போராட வேண்டும் என்பதே கதையின் கரு. இந்த வைணவர்களின் தலைவராக சுவாமி சத்யானந்தா என்று ஒரு துறவியும் – அவரது சீடராக குரு பவானந்தா என்ற வீரமிக்க இளைஞரும் இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள். இந்த பவானந்தா – இந்து இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு முஸ்லிம்களை எதிர்த்துப் போராட ஆயுதப் பயிற்சி அளிக்கிறார். (இவைகள் வரலாறு அல்ல; கதையில் வரும் கற்பனை)
  • பவானந்தா-அப்படி ஆயுதப் பயிற்சிக்கு திரட்டும் இளைஞர்களிடம் பாடும் பாடலே ‘வந்தே மாதரம்’. இதன் பொருள் இதுதான் – “நம்முடைய நோக்கம் நமது தாய்நாட்டை விடுவிப்பதேயாகும். நம்முடைய இனம், மதம், பண்பாடு, பெருமை ஆகிய அனைத்துமே முஸ்லிம்கள் ஆட்சியில் பேராபத்துக்கு உள்ளாகிவிட்டது. நாம் முஸ்லிம்களை ஒழிக்காவிட்டால், நமது தர்மத்துக்கு எதிர்காலமே இல்லை. ஏழுகோடி இந்துக்களாகிய நாம் வாளேந்தி களத்தில் குதித்தால்… அது ஒன்றே போதும் நமது மண்ணின் பெருமையை மீட்க” – இதுதான் ‘வந்தே மாதரம்’ பாடலின் பொருள்.
  • ஆனந்த மடத்துக்குள் ‘விஷ்ணு’வின் மடியில் பலவீனமாக இந்திய மாதா படுத் திருக்கும் படத்தைப் பார்த்து – வைணவ இளைஞர்கள் ‘வந்தே மாதர’த்தை முழங்கி – முஸ்லிம்கள் மீது ஆயுதமேந்தி போரிடுகிறார்கள். பல முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். முஸ்லிம் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். எல்லாவற்றையும் வெற்றிகரமாக முடித்து விட்டு காளிதேவியின் முன் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.
  • “நாம்தான் முஸ்லிம்களை ஒழித்து விட்டோமே, ஆனாலும் இந்து இராச்சியம் வரவில்லையே! ஆங்கிலேயர்கள் அல்லவா தொடர்ந்து நம்மை ஆளுகிறார்கள்?” என்று இளைஞர்கள் சத்யானந்தாவிடம் கேட்க – அவர் கூறுகிறார்: “இப்போது நமக்கு எதிரிகள் யாருமில்லை. ஆங்கிலேயர்கள் நம்முடைய நண்பர்கள். அவர்கள் தங்கள் அதிகாரங்கள் அனைத்தையும் விஷ்ணு கடவுளுக்கே காணிக்கையாக்கியிருக்கிறார்கள்” என்கிறார். சத்யானந்தாவின் இந்தப் பேச்சோடு கதை முடிகிறது.
  • காங்கிரசில் உள்ள இந்து வெறி பார்ப்பன சக்திகள் – காங்கிரஸ் கூட்டங்களில் இந்தப் பாடலைப் பாடி வந்தார்கள்; இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1939ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் தீர்மானம் நிறைவேற்றியது.
  • 1905இல் – வங்காளம் பிரிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் இந்தப் பாடல் முக்கியத்துவம் பெற்றது. அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் நிர்வாகம் இந்தப் பாடலுக்கு தடைவிதித்தது.
  • முஸ்லீம்களைப் புண்படுத்தும் பாடலாக இருந்ததால், காந்தியாரும் இந்தப் பாடல்களைப் பாட அனுமதிக்க மறுத்து வந்தார்.
  • 1946-47இல் ‘வந்தே மாதரத்தை’ தேசிய கீதமாக்க முயற்சி நடந்தும், முஸ்லிம்கள் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.
  • கவிஞர் இக்பாலின் ‘சாரே ஜஹான் சே அச்சா’ என்ற – இந்தியா முழுவதும் உணர்ச்சிகரமாகப் பாடப்பட்ட பாடலை, தேசிய கீதமாக வைப்பதற்கு ‘இந்து தேசியவாதிகள்’ எதிர்த்தார்கள். காரணம் — எழுதிய கவிஞர் ஒரு முஸ்லிம் என்பதால்! பிறகுதான் ‘ஜனகணமன’ பாடல் தேசிய கீதமானது.
  • முஸ்லிம்களை எதிர்த்து ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து இந்து ஆட்சியை உருவாக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டதுதான் ‘வந்தே மாதரம்’. அது ‘தேச பக்தி’ கலாச்சாரத்தின் அடையாளமா?
  • அது ஆங்கிலேயரை எதிர்த்த தேச பக்திப் பாடல் அல்ல; அதன் காரணமாகத்தான், ‘ஆனந்த மடம்’ ஏனைய மொழிகளில் மொழி பெயர்க்கப்படவில்லை; பாடத் திட்டங்களில் இடம் பெறவில்லை; திரைப்படமாகவில்லை; தொலைக்காட்சித் தொடராகவும் உருவாகவில்லை.

நீக்கப்பட்ட வந்தே மாதரம் வரிகள்

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தி வார இதழில் த.லெனின் எழுதிய கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள்:

  • வந்தே மாதரம் பாடலை, இந்திய முஸ்லிம்கள், காங்கிரஸ் மகாசபையில் பாடும் போது எதிர்ப்பு தெரிவித்தனர். முகம்மது அலி ஜின்னா தலைமையிலிருந்த முஸ்லிம் லீக் இறுதி வரை இதனை ஏற்றுக்கொள்ளவேயில்லை.
  • மௌலானா ஆசாத், ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், ஆச்சார்ய தேவா மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் அடங்கிய குழு, இந்தியாவை காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுவிப்பதற்காக, 1937 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸால் வந்தே மாதரத்தின் சில பகுதிகள் தேசியப் பாடலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்துக்கள் அல்லாதவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முழுப் பாடலையும் இந்தத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை, மேலும் ஒரு தனிப்பட்ட காரணத்திற்காக வந்தே மாதரத்தை “ஆட்சேபனைக்குரியது” என்று கருதுவதால், அவர்கள் அதைப் பாட விரும்பவில்லை என்றால், ஒரு மாற்று “ஆட்சேபனையற்ற பாடலை” பாட எவருக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
  • ரவீந்திரநாத் தாகூர் உட்பட கூடியிருந்த தலைவர்களின் கூற்றுப்படி, முதல் இரண்டு சரணங்கள் தாய்நாட்டின் அழகை, உணர்வு ரீதியாக தூண்டும் விதமாகத் தொடங்கினாலும், பிந்தைய சரணங்களில் இந்து தெய்வமான துர்காவைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
  • அகில இந்திய முஸ்லிம் லீக் இந்தப் பாடலை எதிர்த்து. அதன்பிறகு, மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவின் ஆதரவுடன், இந்திய தேசிய காங்கிரஸ் பொதுக் கூட்டங்களில் பாடப்படும், தேசியப் பாடலாக முதல் இரண்டு சரணங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடிவு செய்தது
  • துர்கா மற்றும் லட்சுமி பற்றிய குறிப்புகளைக் கொண்ட பிற வரிகள் நீக்கப்பட்டன என்பதுதான் உண்மையான வரலாறு.
  • எப்படி எடுத்துக் கொண்டாலும் காங்கிரஸ் கட்சி மாநாடுகளில் பாடப்பட்ட பிறகு தான் அந்தப் பாடல் விடுதலை இயக்கத்தின் சின்னமாக மாறியது. ஆனால் இது எழுதப்பட்ட காலத்தில் அதிலும் குறிப்பாக பங்கிம் சந்திரர் பிரிட்டிஷ் அரசின், ஒரு சாதாரண எழுத்தாக இருந்தவர். இப்பாடல் பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்த காரணத்தால் அவருக்கு துணை மாவட்ட ஆட்சியராகவும், நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற வைத்து தங்களது விசுவாசத்தைக் காட்டினர். இதன்மூலம் பிரிட்டிஷ் மாதாவுக்கு சேவகம் செய்ததால்தான் இந்த வெகுமதிகள் கிடைத்தது என்பது தெளிவாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share