நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜூலை 24-ந் தேதி வருவாயத்துறை அலுவலர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்களின் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நேற்று ஜூலை 24- ந்தேதி நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக நமது ‘மின்னம்பலத்திடம்’ வருவாய்த் துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஆனந்தன் கூறியதாவது: நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியர் ‘தீர்வு’ என்ற புதிய செயலியை (APP) அறிமுகப்படுத்தி அனைவரும் அதில் அப்டேட் செய்ய வேண்டும் என வலியுறுத்துவது எங்களுக்கு கூடுதல் பணி சுமையாக உள்ளது. வழக்கமான அரசு பணிகளுடன் இந்த தீர்வு ஆப்- செயலியை பயன்படுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என வலியுறுத்துகிறோம்.
வழக்கமான அலுவலக நேரம் முடிந்த பின்னரும் இரவு 8 மணி வரை கூட பணியாற்ற சொல்வது ஏற்புடையது அல்ல. ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆய்வுக் கூட்டம், ஆலோசனைக் கூட்டம் கூட்டி அரசு ஊழியர்களை அலைகழிக்கச் செய்வது கடுமையான மனை உளைச்சலை ஏற்படுத்துகிறது.
இணையவழி சான்றிதழ் விண்ணப்பங்கள் மீது உரிய விசாரணையை நடத்தி முடிப்பதற்குள்ளாகவே மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். இப்படி வழங்கினால் பின்னாளில் பிரச்சனை என வரும் போது வருவாய்த்துறை அதிகாரிகள் தான் வழக்குகளை சந்திக்க நேரிடுகிறது. அத்துடன் வழக்கமான பணிகளை கிடப்பில் போட வேண்டிய நெருக்கடியும் ஏற்படுகிறது.
3 ஆண்டுகால Gpay கணக்கு கேட்கும் விஜிலென்ஸ்
சமீபகாலமாக விஜிலென்ஸ் அதிகாரிகள் வருவாய்த்துறை அலுவலகங்களில் அடிக்கடி சோதனை நடத்துகின்றனர். எங்களது அலுவலகங்களில் கணக்கில் காட்டப்படாத பணம் இருந்தால் விஜிலென்ஸ் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்யலாம். ஆனால் ஒவ்வொருவருடைய ஜிபே (Gpay) கணக்குகளை வைத்துக் கொண்டு 3 ஆண்டுகளுக்கு முந்தைய பரிவர்த்தனைகளுக்கு எல்லாம் விளக்கம் கேட்டால் எப்படி பதில் சொல்ல முடியும்?
விஜிலென்ஸ் சாராத எங்களுடைய அலுவல் பணி சார்ந்த விவகாரங்களிலும் கூட சோதனைக்கு வரும் அதிகாரிகள் கேள்விகளை கேட்கின்றனர்.
அரசு ஊழியர்களை- வருவாய்த்துறை அலுவலர்களை ‘கொத்தடிமைகளாக’ நடத்தும் போக்கையும் நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. இதனை வலியுறுத்திதான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பெருந்திரள் முறையீட்டு போராட்டம் நடத்தினோம்.
எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மதுபாலன் எங்களை சந்திக்கவில்லை. மாவட்ட வருவாய் அலுவலர் சரவணனிடம் எங்கள் கோரிக்கைகளை தெரிவித்துள்ளோம். இவ்வாறு ஆனந்தன் கூறினார்.
படங்கள்






