வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட சிற்றுண்டியில் ‘ஃபெவி க்விக்’ (ஒட்டும் பசை) பாக்கெட் இருந்தது பயணிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சேகர் என்பவர், ‘லயன்ஸ் கிளப்’ அமைப்பைச் சேர்ந்த 150 பேருடன் மைசூரு சென்றுவிட்டு நேற்று சென்னைக்குத் திரும்பினார். இவர்கள் சென்னை வருவதற்காக வந்தே பாரத் விரைவு ரயிலில் சிற்றுண்டிக் கட்டணத்துடன் சேர்த்து தலா ரூ. 1,400 செலுத்தி பயணச்சீட்டு பதிவு செய்திருந்தனர்.
நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் பயணிகளுக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அப்போது, சேகருக்கு வழங்கப்பட்ட வடைக்குள் ஃபெவி க்விக் பாக்கெட் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து, ரயிலில் வழங்கப்பட்ட சிற்றுண்டியை லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் அனைவரும் சாப்பிடுவதைத் தவிர்த்து, மீண்டும் ரயில்வே ஊழியர்களிடமே திருப்பி ஒப்படைத்தனர். மேலும், சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கிய கேட்டரிங் ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி ரயிலுக்குள்ளேயே கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில்வே மேலாளர்கள் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சேகரிடமிருந்து எழுத்துப்பூர்வமான புகாரைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கேட்டரிங் ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இச்சம்பவம் வந்தே பாரத் ரயிலில் பயணித்த சக பயணிகளிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
