ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து போக்குவரத்துக் கழகம் இயக்கியுள்ளது.
இன்றும் நாளையும் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பலரும் நேற்று இரவே கிளாம்பாக்கத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 3000 த்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும் போதிய பேருந்துகள் கிடைக்காமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது.
நேற்று (அக்டோபர் 10) நள்ளிரவு 12.00 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,028 பேருந்துகள் இயக்கப்பட்டன என்றும் இதில் 1,62,240 பேர் பயணித்துள்ளனர் என்றும் தமிழகப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
அதேபோன்று திருச்சி, மதுரை, விழுப்புரம் என பிற மாவட்டங்களில் இருந்தும் பயணிகள் அதிகளவு தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பினர்.
இந்த சூழலில், மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க விழுப்புரத்திலிருந்து வேலூர், திருச்சி , திருவண்ணாமலை ஆகிய நகரங்களுக்கு தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து இயக்கியுள்ளது போக்குவரத்து கழகம்.
ஏற்கனவே தீபாவளி பொங்கல் போன்ற காலகட்டங்களில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அரசுப் பேருந்துகளுடன், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டு வருவதாக வெளியான நிலையில் தற்போது ஆயுத பூஜை விடுமுறை நாட்களை முன்னிட்டு விழுப்புரம் மண்டலத்தில் இருந்து தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
வரும் தீபாவளி பண்டிகைக்கும் இதுபோன்று இயக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
முதல் இன்னிங்சில் 556 ரன்கள்… சொந்த மைதானத்தில் நொந்த பாகிஸ்தான்