மாணவர்கள் மீதான போலீஸ் அடக்குமுறை தொடர்பாக மத்திய அரசு மற்றும் 7 மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் இன்று ஜூலை 28-ந் தேதி உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிரான நாடு தழுவிய மாணவர் போராட்டங்களின் போது போலீசார் அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
இன்றைய விசாரணையின் முடிவில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:
- டெல்லி யூனியன் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய 7 மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
- மாணவர்கள் நடத்திய போராட்டங்களின் சிசிடிவி காட்சிகள், டிரோன் காட்சி பதிவுகள், காவல்துறை பதிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்
- டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது
- 18 வயதுக்கு குறைவான, கிரிமினல் பின்னணி இல்லாதவர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலோ தடுத்து வைக்கப்பட்டிருந்தாலோ அவர்கள் அனைவரையும் உடனடியாக சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களும் விடுதலை செய்ய வேண்டும்
- போலீசாரின் அடக்குமுறை குறித்து விசாரிக்கப்படும். அதேநேரத்தில் போராட்டத்தில் சிக்கிய சிறார்களைப் பாதுகாப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
