அடக்குமுறையை ஏவிய போலீசாருக்கு சிக்கல்.. உச்சநீதிமன்றம் அதிரடி!

Published On:

| By Mathi

Students Protest Supreme Court

நாடு முழுவதும் நீட் தேர்வு விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் அடக்குமுறையை ஏவியது குறித்து நியாயமான, சுதந்திரமான விசாரணை தேவை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராகவும் நீட் மோசடிகளுக்கு எதிராகவும் டெல்லி தொடங்கி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி, பீகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களில் மாணவர்கள் போராட்டங்களை போலீசார் கொடூரமாக அடக்கினர்.

ADVERTISEMENT

மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியது, மின்சார லத்திகளை பயன்படுத்தியது, ஏகே 47 ரக துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியது உள்ளிட்டவை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று ஜூலை 28-ந் தேதி விசாரித்தது.

ADVERTISEMENT

இன்றைய விசாரணையின் போது, போலீசாரின் பெல்லட் குண்டு தாக்குதலால் 19 வயது இளைஞரின் கண்பார்வை பறிபோனது மற்றும் மின்சார லத்திகள், ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகள் பயன்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள், பத்திரிகையாளர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவங்கள் உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டன.

அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்த கருத்துகள்:

ADVERTISEMENT

ஜனநாயக நாட்டில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தவிர்க்க முடியாதவை. இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களின் போது காவல்துறை எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து நாடு முழுவதும் தெளிவான ஒரே மாதிரியான நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம்.

அமைதியான முறையில் அரசியலமைப்புச் சட்ட வரம்புக்குள் நடத்தப்படுகிற போராட்டங்களின் போது, அத்துமீறல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டம் தன் கடமையைச் செய்யும் வகையில் முற்றிலுமாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி தெரிவித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share