தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பணி மருத்துவர்களுக்கான 151 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு (Super Speciality) இடங்களை மத்திய தொகுப்பிற்குத் திரும்ப ஒப்படைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு மருத்துவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், முதல்வர் விஜய் அரசுக்கு சரமரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தம் 670 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன.
இதில் அரசு கல்லூரிகளில் உள்ள 415 இடங்களில் 215 இடங்கள், அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீடு. இத்தகைய படிப்பில் சேரும் அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வரை அரசு பணியில்தான் இருக்க வேண்டும். இதனால் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ வல்லுநர்கள் கிடைத்து வந்தனர்.
அரசு மருத்துவர்களுக்கான 215 இடங்களை கலந்தாய்வு செய்யும் பணி நடத்தப்பட்டது. இதன் பின்னரும் 151 இடங்கள் காலியாக இருப்பதாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த 151 இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு திருப்பி அளித்து அடுத்தக்கட்ட கலந்தாய்வை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழகத்தை சேர்ந்த தமிழ்வாணி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவு என்ன?
இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் அராதே ஆகியோர் அடங்கிய அமர்வு, ”தமிழ்நாட்டில் காலியாக உள்ள 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்களை மத்திய அரசிடம், தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். இதற்கு தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டும் அந்த எதிர்ப்பை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இதனால் 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்களை மத்திய அரசிடம், தமிழக அரசு சரண்டர் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்விகள்
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: 6 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்
- தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?
- மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?
- நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் ‘சரண்டர்’ ஆனதன் பின்னணி என்ன?
- அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?
- தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?
- 29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?
இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள்.
எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர் சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்சினை இது.
த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
