டாஸ்மாக் முறைகேடு: 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Published On:

| By Pandeeswari Gurusamy

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (ஜூலை 29) காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே அமைந்திருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, டாஸ்மாக் முறைகேடு விவகாரங்களில் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, டாஸ்மாக் விற்பனை மூலம் வரும் வருவாய் முழுமையாக அரசு கருவூலத்திற்குச் சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

ஆலைகள் மற்றும் கிடங்குகளில் சோதனை:

இதன் தொடர்ச்சியாக, இன்று காலை 8 மணி முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 4 குழுக்களாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னார்குடியில் உள்ள திமுக பொருளாளர் டி.ஆர். பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையிலும், மேட்டுப்பாளையத்தை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இயங்கி வரும் சிவாஸ் மதுபானத் தயாரிப்பு ஆலையிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

கோவை பீளமேடு, பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் நவகரை ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கிடங்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்கிறது.

கோவை பீளமேடு மற்றும் பொள்ளாச்சிப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கிடங்குகளுக்கு எந்தெந்தத் தொழிற்சாலைகளில் இருந்து மதுபானங்கள் வாங்கப்பட்டன, விற்பனை விவரங்கள், தனியார் மதுக்கூடங்களுக்கான விநியோகம், காலி பாட்டில்களைத் திரும்பப் பெற்ற முறை, அட்டைப் பெட்டிகள், பாட்டில் மூடிகள் மற்றும் ஸ்டிக்கர்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் குறித்து அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இன்று காலை முதல் முன்னாள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், மதுபான ஆலைகள் மற்றும் டாஸ்மாக் கிடங்குகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நீடித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share