கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் வீடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் இன்று (ஜூலை 29) காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கு, டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் ரூ.397 கோடி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினருக்குப் பணம் கொடுத்து பேரம் பேச முயன்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாகவும் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமின் அடிப்படையில் செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக் குமாரும் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல், லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூரின் மண்மங்கலம் அருகே உள்ள ராமேஸ்வரப்பட்டியில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு, அவரது உதவியாளர் சுப்பிரமணியன் மற்றும் திமுக நிர்வாகி பாஸ்கரன் வீடு மற்றும் கோதை நகரில் உள்ள ரமேஷ், கார்த்திக் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனை நடைபெறுகிறது. இது தவிர, கரூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் மற்றும் கிடங்கிலும் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனையின் போது ராமேஸ்வரப்பட்டியில் உள்ள வீட்டில் இருந்த செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். எதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது என்பது குறித்த முழுமையான தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை
