திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று அவர் போட்டியிட்ட கொளத்தூர் சட்டசபை தொகுதியில் 14 வாக்குச் சாவடிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்களை இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஜூலை 29-ந் தேதி காலை 9 மணிக்கு ஆய்வு செய்ய தொடங்கி இருக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தவெகவின் வி.எஸ். பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் தோல்வி அடைந்ததை ஏற்க முடியாமல் திமுகவினர் இப்போதும் பரிதவிக்கின்றனர்.
இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குச் சாவடிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார்.


இதனை ஏற்று கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குச் சாவடிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்களை மறு ஆய்வு செய்யும் பணி இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள EVM Burnt Memory / Microcontroller ஆகியவற்றின் விவரங்கள் மறு ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வு அடுத்த 7 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும். இதனால் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
