நகராட்சி நிர்வாக துறையில் முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு, பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி கே.என். நேரு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று (ஜூலை 28) மீண்டும் தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது முன்னாள் அமைச்சர் கே.என். நேரு சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்.
அப்போது அவர், “இந்த வழக்கில் எங்களது தரப்பு விளக்கத்தைக் கூற உரிமை உள்ளது. நான், இந்த வழக்கிற்கு சம்பந்தப்பட்ட ஒரு நபர், வெளியாள் அல்ல. என் கருத்தையும் விளக்கத்தையும் தெரிவிக்க உரிமை உள்ளது. இந்த உரிமையை கட்டுப்படுத்தக் கூடாது” என்று தெரிவித்தார்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயன், முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தாக்கல் செய்துள்ள மறுபரிசீலனை மனுவின் சட்டபூர்வத் தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அவர், ”குற்றவியல் தன்மையுடைய ஒரு ரிட் மனுவில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 362 இன் கீழ் மறுபரிசீலனை மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கு சட்டபூர்வ தடை உள்ளது” என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்து வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, ‘இது குற்றவியல் சார்ந்த வழக்காகவே இருந்தாலும், இயற்கை நீதி நெறிமுறைகளுக்கு முரணாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் எந்த சட்டத் தடையும் பொருந்தாது. வழக்கின் தொடர்புடைய ஒரு தரப்பினரின் வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அந்த உத்தரவை திரும்ப பெறவோ அல்லது மறுபரிசீலனை செய்வதற்கோ போதுமான காரணங்கள் உள்ளன” என்று குறிப்பிட்டார் .
அரசியலமைப்பின் பிரிவு 226 இன் கீழ் நீதிமன்றம் தனக்குள்ள ரிட் அதிகார வரம்பை பயன்படுத்தி தான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்று தெரிவித்த சித்தார்த் லூத்ரா, சட்ட விதிகளின்படி பார்க்கும்போது மறுபரிசீலினை செய்யவும் முழு உரிமை உண்டு.
இயற்கை நீதியை பின்பற்றாமல், ஒரு தரப்பினரின் வாதத்தை கேட்காமல் தன்னிச்சையாக ஒரு உத்தரவு பெறப்பட்டிருந்தால் அந்த உத்தரவை திரும்ப பெற நீதிமன்றம் தனது அதிகார வரம்பை பயன்படுத்த முடியும்.
சட்டம் மிகத் தெளிவாக உள்ளது. விதிகளின்படி இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது. இது குற்றவியல் சார்ந்த மனுவாகவே இருந்தாலும் மறுபரிசீலினை செய்யக்கூடாது என்ற சட்டத்த தடை (பிரிவு 362) இதில் செல்லாது.
தற்போது நான் வழக்கைப்பற்றி ஆழமாக விவாதிக்கவில்லை. எங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் உத்தரவு போடப்பட்டுள்ளது.. எங்கள் தரப்பு நியாயத்தை சொல்ல ஒரு வாய்ப்பு தர வேண்டாமா? என்பதைத்தான் இந்த நீதிமன்றத்திடம் கேட்கிறோம்’ என்று வாதங்களை முன் வைத்தார்.
அவரைத் தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியராஜன் ஆஜராகி, இது போன்ற வழக்குகளில் மறுபரிசீலனைக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வாதாடினார்.
இந்த வாதங்களை தொடர்ந்து, அரசு தரப்பு வாதத்துக்காக வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
