சீமான் பற்றி அவதூறு – யூடியூபர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிய உத்தரவு!

Published On:

| By Kavi

சீமானை பற்றி அவதூறாக பேசிய யூடியூபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். 

ADVERTISEMENT

அதில், ’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகியோர் தரக்குறைவான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்து அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர். 

பிஸ்மி அளித்த பேட்டி ஒன்றில், சீமான் திமுக தலைவர் ஸ்டாலினிடம் 100 கோடி ரூபாய் பெற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அதோடு சீமானின் புகைப்படங்களை நக்கல் நையாண்டியாக மார்ஃபிங் செய்து பேசி வருகிறார். 

ADVERTISEMENT

எனவே இந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தும் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எனவே கடந்த ஜூலை 3ஆம் தேதி அளித்த புகாரை பரிசீலித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு இன்று (ஜூலை 28) விசாரணைக்கு வந்தது. 

ADVERTISEMENT

அப்போது மனுதாரர் சார்பில், ‘நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறான கருத்துகளை இந்த யூடியூபர்கள் திட்டமிட்டு பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக அளித்த புகார் மனு மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்கவும் மறுக்கிறது. 

பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் 100 கோடி ரூபாய் பெற்றார் என பேசியவர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்தது. ஆனால் சீமான் குறித்து அவதூறாக பேசினால் நடவடிக்கை எடுப்பதில்லை” என்று வாதிடப்பட்டது. 

இதை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, ‘தேர்தலில் தோற்கலாம் அல்லது வெற்றி பெறலாம். ஆனால் தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக சீமான் உருவாகியுள்ளார். 

முதல்வர் குறித்து திமுக எம்எல்ஏ பேசினால் உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்கிறீர்கள். அப்படியானால் காவல்துறை பாரபட்சம் பார்க்கிறதா?.

ஒரு தலைவர் குறித்து அவதூறாக பேசுவதை வேடிக்கை பார்க்க முடியாது. 

சீமான் குறித்து மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை இன்றைக்குள் அகற்றி இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். 

இது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய வேண்டும்” என்று மதுரை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share