தமிழ்த் தாய் வாழ்த்து பிரச்சனையில் முதல்வர் விஜய்க்கு சி.பி.எம்-ன் மாநில செயலாளர் பெ. சண்முகம் கேள்விகளை எழுப்பி உள்ளார். அதேபோல சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியனும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம்: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?
தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் – அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வந்தேமாதரம் பாடல் முதலில் பாடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்கல்வித்துறை அமைச்சர் திரு்விஸ்வநாதன் அந்த விழாவை புறக்கணித்துள்ளார். இது வரவேற்பிற்குரியது.
இருப்பினும் தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் வழிகாட்டலைப் பின்பற்றாமல், ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கர் ஆலோசனை அடிப்படையில் செயல்படுவது, உயர்கல்வியில் தமிழ்நாட்டின் உரிமை பறிபோகிறதோ என்ற ஐயத்தை எழுப்புகிறது.
அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் இச்செயல் கண்டிக்கத்தக்கது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தமிழ்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றிய கவிஞர் மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள, பல்கலைக்கழகத்திலேயே, தமிழுக்கு முதன்மை இடம் கிடைக்கவில்லை என்பது தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
“வந்தேமாதரம்” ஒரு குறிப்பிட்ட மதத்தின் சார்பு உடையதாகவும், சில வரிகள் முஸ்லீம் சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாகவும் உள்ளதால், அப்பாடலை தேசிய கீதமாக ஏற்கக் கூடாது என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆளுநர் மாளிகை நிர்வாகத்தின் உத்தரவுப்படி, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரலில் “வந்தேமாதரம்” பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் நிலையில் வைத்தது மரபை மீறிய செயலாகும்.
ஒன்றிய அரசு அரசு நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு மாநிலத்தின் பாடல்களை முதலில் பாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையிலும் கூட, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கர் தமிழை மூன்றாம் நிலைக்கு தள்ளச் செய்தது என்பது அவரது தமிழ், தமிழர் விரோத மனநிலையை வெளிப்படுத்துகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கரை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
