எ.வ.வேலு வழக்கு: லுக் அவுட் நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Kavi

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

கரூர், திருப்பூர் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணி மேற்கொள்ளாமலேயே பல கோடி ரூபாய் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில் முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் வழக்கின் எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்து உத்தரவிட வேண்டும். தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் வேலு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு கடந்த ஜூலை 9ஆம் தேதி நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, ஜூலை 15ஆம் தேதி அன்று லஞ்ச ஒழிப்புத் துறை முன் எ.வ.வேலு ஆஜராக வேண்டும். லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

ஜூலை 28ஆம் தேதி வரை எ.வ.வேலுவை கைது செய்வது போன்ற விவகாரங்களில் அவசரப்பட்டு எந்த ஒரு கடுமையான நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்தார்.

நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஜூலை 15ஆம் தேதி எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜரானார்.

ADVERTISEMENT

இந்த சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு வழக்கு மீண்டும் இன்று (ஜூலை 28) விசாரணைக்கு வந்தது.

அப்போது நெடுஞ்சாலை துறையின் கீழ் சாலைகள் அமைத்ததில் பொதுப்பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யக் கோரிய எ.வ.வேலு தாக்கல் செய்த வழக்கில் அறப்போர் இயக்கம் இடையீட்டு மனுதாரராக சேர நீதிபதி இளந்திரையன் அனுமதி அளித்தார்.

தொடர்ந்து மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யக் கோரும் இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி இளந்திரையன் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அதேசமயம் காவல்துறையினர் விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்றும், விசாரணைக்காக முன்னாள் அமைச்சருக்கு சம்மன் அனுப்பலாம் என்றும் கூறிய நீதிபதி, அதே வேளையில் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு அடுத்தகட்ட விசாரணை தேதி வரை நீடிக்கும் என்றும் கூறினார்.

மேலும் எ.வ.வேலு வெளிநாடு செல்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகார வரம்புடைய நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்று நிபந்தனையுடன் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share