தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதுதான் நமது கொள்கை என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 28) நடைபெறுகிறது.
இவ்விழாவில் ஆளுநர் அலுவலகம் வழங்கி உள்ள உத்தரவின்படி, முதலாவதாக ‘வந்தே மாதரம்’, இரண்டாவதாக தேசிய கீதம், மூன்றாவதாக மட்டுமே ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் அறிவித்தார். துணைவேந்தரின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவிருந்த தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், விழாவில் கலந்துகொள்ள மாட்டார் என பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் இந்த புறக்கணிப்பு தற்போது பெரும் பேச்சாக மாறியுள்ளது.
அமைச்சர் கருத்து:
இது குறித்து சென்னை தரமணியில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில் , “தமிழ்த்தாய் வாழ்த்து விஷயத்தில் ஆளுநர் தரப்பில் இருந்து பல்வேறு வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இது ஏற்புடையது அல்ல. தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதுதான் நமது கொள்கை.
மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் கூட, அவர்களது பிராந்திய பாடலுக்குத் தான் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அதே நடைமுறைதான் பின்பற்றப்பட வேண்டும். மாறாகச் செய்வது தவறான விஷயம்; அதை அனுமதிக்க முடியாது. தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒன்றை அரசு ஒருபோதும் அனுமதிக்காது” என்று தெரிவித்தார்.
