மேகதாது: மக்களவையில் விவாதிக்க கோரி மாணிக்கம் தாகூர் நோட்டீஸ்!

Published On:

| By Mathi

Parliament

மேகதாது (Mekedatu) அணை விவகாரம் குறித்து மக்களவையில் இன்று ஜூலை 28-ந் தேதி விவாதிக்க கோரி தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதில் பிடிவாதமாக இருக்கிறது; ஆனால் தமிழ்நாடு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் மாநிலங்களவையில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் எம்.பி. மேகதாது அணை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.

அதில், “காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மத்திய அரசுக்குத் தெரியுமா? காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தை மேற்கொள்வதற்கு மேல்பாசன மாநிலமான கர்நாடகா, கீழ் பாசன மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது அந்தத் தீர்ப்பில் உள்ளதா? மேகதாது அணை திட்டத்துக்காக கர்நாடகா அரசு, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் அனுமதியைப் பெற்றுள்ளதா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

ADVERTISEMENT

இதற்கு மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரி அளித்த பதிலில், “ காவிரி ஆற்றின் குறுக்கே எந்த ஒரு கட்டுமானத்தையும் மேற்கொள்ள கீழ்பாசன மாநிலங்களின் அனுமதியை கர்நாடகா பெற வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடவில்லை; மேகதாது அணை தொடர்பான திருத்தப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடகாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது” என கூறியிருந்தார்.

மத்திய அரசின் இந்த பதில் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், மேகதாது அணை தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவரான மாணிக்கம் தாகூர் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share