மேகதாது: தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை – மத்திய அரசு!

Published On:

| By Kavi

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட கடைமடை மாநிலங்களின் ஒப்புதல் தேவை இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு கர்நாடகா தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

ADVERTISEMENT

இதனை கண்டித்து தமிழகத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவை இல்லை என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் பூஷன் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேகதாது அணைக்கு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய கடைநிலை மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெற்றுள்ளதா?

மத்திய அரசின் பரிசீலணையில் உள்ள இந்த திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியிருந்தார்.

ADVERTISEMENT

இதற்கு மத்திய இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் 2018 பிப்ரவரி 16ம் தேதியிட்ட தீர்ப்பில், காவிரியின் குறுக்கே எந்த ஒரு கட்டுமானத்தையும் கட்டுவதற்கு கர்நாடகா மற்ற கடைமடை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.

அன்றைய தேதியிட்ட உத்தரவில் 2017 ஆம் ஆண்டின் காவிரி நதிநீர் பங்கீடு தீர்ப்பாயத்தின் 18ஆவது பிரிவு பொருத்தமானது என கண்டறிந்து, ‘இந்த தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு முரணாக இல்லாத வகையில் எந்த ஒரு மாநிலமும் தனது எல்லைக்குள் நீர் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கோ, நீரின் பலனை அனுபவிப்பதற்கோ உள்ள உரிமை, அதிகாரம் அல்லது அதிகார வரம்பை பாதிக்காது என்று கூறப்பட்டுள்ளது.

கர்நாடகாவால் 2019ல் சமர்ப்பிக்கப்பட்ட மேகதாது நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு இணங்கவும் தற்போதுள்ள மத்திய நீர் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் படியும், திருத்தப்பட்ட திட்ட அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரி திட்ட அதிகாரிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share