கரூரில் 41 பேர் உயிரிழப்பு விவகாரம் : விஜய் வழங்கிய அரசு பணி நியமனம் ரத்து

Published On:

| By Pandeeswari Gurusamy

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 31 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு வழங்கிய அரசு பணியை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி விஜய்யை பார்க்க வந்த 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்த நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கி முதல்வர் விஜய் உத்தரவிட்டார். அதன்படி, கடந்த ஜூலை 10-ஆம் தேதி கரூர் சென்ற முதல்வர், பயனாளிகளுக்கு நேரடியாக பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதற்கிடையே, அரசால் வழங்கப்பட்ட இந்த பணி நியமனங்களை ரத்து செய்யக் கோரி சென்னை சூளையைச் சேர்ந்த வழக்கறிஞர் என். பிரபாகரன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன் திருமுருகன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகி சீனி அகமது மற்றும் திண்டுக்கல் வேடசந்தூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்தனர்.

ADVERTISEMENT

மனுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்கள்:

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே அரசு சார்பில் ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் ரூ20 லட்சமும் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2020-ஆம் ஆண்டின் அரசு விதமுறைகளின்படி , அரசியல் மற்றும் பொதுக்கூட்டங்களில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்போருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வழிவகை இல்லை. இச்சம்பவம் தொடர்பான வழக்கு புலன் விசாரணையில் உள்ள சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவது விசாரணையில் தலையிடுவதாகவும், சாட்சியங்களை மாற்ற நிர்ப்பந்திப்பதாகவும் அமையும்.

மாநிலத்தில் சுமார் 39 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வரும் சூழலில், ஒவ்வொரு அரசுத் தேர்வுக்கும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர் எனும் வாதம் முன்வைக்கப்பட்டது

இவ்வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “31 பேருக்கு அரசுப் பணி வழங்கியது அரசின் கொள்கை முடிவு. அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்பிற்கு உட்பட்டே பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். டி.என்.பி.எஸ்.சி. தரப்பிலும் இதற்கு சிறப்பு அனுமதி தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசு தரப்பிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்:

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவதற்குப் பதிலாக, சுயவேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்கி தொழில்முனைவோராக மாற்றியிருக்கலாமே? அதுதானே மிகவும் பயனுள்ளதாக இருக்கும்?

அரசு தரப்பில் இது சாதாரண பணி என்று கூறப்படுவதை ஏற்க முடியாது. எந்தப் பணியும் சாதாரணமானது அல்ல. கருணை அடிப்படையில் பணி பெற ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கும் போது, இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பது ஏன்?

சிவகாசி வெடிவிபத்து, பேருந்து விபத்துகள் மற்றும் தினமும் நடக்கும் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கும் அரசுப் பணி வழங்கிவிட முடியுமா?” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share