‘E20 ஜனதா கட்சி’ டெல்லியில் போராட்டம்! நிதின் கட்கரி பதவிக்கு ’வேட்டு’? பின்னணி என்ன?

Published On:

| By Mathi

E20 JP Nitin Gadkari

நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிராக டெல்லியில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ – காக்ரோச் ஜனதா கட்சி (CJP) டெல்லியில் தொடங்கிய போராட்டம் மத்திய கல்வித் துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானின் பதவியையே பறித்தது.

”காக்ரோச்” வழியில் தற்போது ‘E20 ஜனதா கட்சி’ (E20 Janta Party) என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டு பேசுபொருளாகி இருக்கிறது. இந்த கட்சியினர், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி ஆகியோரது ராஜினாமாவை கோருகின்றனர்.

ADVERTISEMENT

மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின், “எத்தனலாலில் பெட்ரோல் கலக்கும்” கொள்கைக்கு எதிராக உருவாகி இருக்கிறது இந்த E20 ஜனதா கட்சி.

மத்திய அரசின் எத்தனால் கொள்கை

கரும்பு, மக்காச்சோளம், அரிசி கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது ‘எத்தனால்’ (Ethanol). எத்தனாலை பெட்ரோலுடன் குறிப்பிட்ட சதவீதத்தில் கலந்து வழங்குவது என்பதுதான் மத்திய அரசின் கொள்கை. இதன் பெயர் இபிபி திட்டம் (EBP – Ethanol Blended Petrol).

ADVERTISEMENT

இதன்படி பெட்ரோலில் எத்தனால் கலப்பு என்பது 2013-14-ம் ஆண்டில் 1.5 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. தற்போது 2025-26-ல் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அத்துடன் எத்தனால் உற்பத்தியால் கரும்பு மற்றும் மக்காச்சோளத்திற்கு மாற்றுச் சந்தை உருவாகிறது; இது விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்துகிறது என்கிறது மத்திய அரசு.

ADVERTISEMENT

பெட்ரோல் பயன்பாட்டின் மூலமான கார்பன் உமிழ்வையும் எத்தனால் கட்டுப்படுத்துகிறது என்பதும் மத்திய அரசின் வாதம்.

எதிர்ப்பு ஏன்?

எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதால் பழைய வாகனங்களின் மைலேஜ் (Mileage) குறைகிறது. வாகனங்களில் என்ஜின் பாகங்கள், ரப்பர், பிளாஸ்டிக் குழாய்களில் தேய்மானம் ஏற்படுகிறது என்பது குற்றச்சாட்டு. 20% எத்தனால் கலந்த பெட்ரோலை மட்டுமே வாங்க வேண்டும் என நிர்பந்திக்காமல் குறைந்த அளவிலான எத்தனால் கலந்த பெட்ரோலை வாங்குவதற்கு நுகர்வோருக்கு உரிமை தேவை என்பதும் கோரிக்கை.

உதயமான E20 ஜனதா கட்சி- ஜந்தர் மந்தர் போராட்டம்

‘E20 ஜனதா கட்சி’ (E20 Janta Party) என்பது, மத்திய அரசின் E20 எத்தனால் கலப்பு பெட்ரோல் கொள்கைக்கு எதிரான கட்சி. காக்ரோச் ஜனதா கட்சி வழியைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள ‘ஆன்லைன்’ இயக்கம். நுகர்வோருக்கு எத்தனை சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை தேர்வு செய்ய வேண்டும் என்கிற உரிமையை கோருகிறது. அதாவது புதிய வாகனங்களுக்கு E20; பழைய வாகனங்களுக்கு E10; விரும்பும் மக்களுக்குத் தூய பெட்ரோல் E0 தடையின்றி கிடைக்க வேண்டும் என்பது இதன் கோரிக்கை.

தற்போது டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த கட்சியினர் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.

கோரிக்கை

பெட்ரோலில் எத்தனால் கலக்கும் கொள்கையின் முகமாகக் கருதப்படும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி; பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோரின் ராஜினாமாவை E20 ஜனதா கட்சி வலியுறுத்துகிறது.

நிதின் கட்கரி குடும்பமும் எத்தனாலும்

குறிப்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் குடும்பத்தினருக்கு சொந்தமாக மகாராஷ்டிராவில் சர்க்கரை ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளை அவரது மகன்கள் நிர்வகித்து வருகின்றனர். சர்க்கரை ஆலைகளின் உபபொருட்களில் இருந்துதான் எத்தனால் தயாரிக்கப்படுகிறது.

எத்தனால் உற்பத்தித் தொழிலிலும் நிதின் கட்கரி குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குற்றச்சாட்டு.

ஆனால் நிதின் கட்கரியோ, ”எத்தனால் கொள்கைக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே சர்க்கரை ஆலைகளை நாங்கள் நடத்தி வருகிறோம்; இந்தியாவின் மொத்த எத்தனால் உற்பத்தியில் எங்களது குடும்ப நிறுவனங்களின் பங்களிப்பு 0.5 சதவீதத்திற்கும் குறைவுதான். எங்களது குடும்பத்தின் மொத்த வணிகத்தில் எத்தனால் வெறும் 10 சதவீதம்தான்” என்கிறார். எத்தனால் கலந்த பெட்ரோல் விவகாரத்தில் தமது குடும்பத்தினர் மீதான அவதூறுகளுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் நிதின் கட்காரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த E20 ஜனதா கட்சியால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு புதிய நெருக்கடி உருவாகி உள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share