சோபா கொடுத்து திமுக, அதிமுக உறுப்பினர்களை வாங்குவதையே 24 மணி நேர வேலையாக இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூலை 27) சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மார்க்கண்டேயனின் விடுதலைக்காக திமுக தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக எடுத்துக் கூறி அவருக்கு ஆறுதல் தெரிவித்தோம்.
மிசா எமர்ஜென்சியை பார்த்தது திமுக. தத்தி தாவி ஆட்சிக்கு வந்து தறிக்கெட்டு அரசு நடத்தும் சோபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் திமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்.
விமர்சனத்துக்காக செய்யப்படும் ஒவ்வொரு கைதின் போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள் மக்கள் மன்றத்திலும் சரிவை சந்திப்பது உறுதி” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ”முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரோடு சென்று அண்ணன் மார்க்கண்டேயனை சந்தித்து விட்டு வந்தோம். அவர் மிகவும் தைரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்.
சோசியல் மீடியாவில் தமிழக வெற்றி கழக கட்சியை சேர்ந்தவர்களே பல்வேறு குற்றச்சாட்டுகளை எல்லாம் வைத்து வருகிறார்கள். அதையெல்லாம் சட்டமன்றத்தில் நான் பேசியிருக்கிறேன். இதை இந்த அரசு கொஞ்சம் கூட செவி கொடுத்து கேட்கவில்லை. நடவடிக்கையும் எடுக்கவில்லை. முழுக்க முழுக்க திமுக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சோபா கொடுத்து வாங்குவதில் தான் ஈடுபடுகிறார்கள். நான் யாரை சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியும். இந்தப் பணியை 24 மணி நேர வேலையாக இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
