தவெக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா அமைச்சர் ஜெகதீஸ்வரி?

Published On:

| By Pandeeswari Gurusamy

Minister Jegadeshwari

தவெக நிர்வாகிக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கொலை மிரட்டல் விடுத்ததாக வெளியான ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சருடன் பேசியவர் தவெகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

தவெக விருதுநகர் வடமேற்கு ஒன்றியச் செயலாளர் ராஜகுருவுடன் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தவெக நிர்வாகி சாத்தூர் லட்சுமணன் தன் தொகுதிக்குள் நுழைந்தால் கொன்று விடுவதாக அமைச்சர் பேசிய ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அமைச்சர் ஜெகதீஸ்வரி, ராஜகுருவுடன் பேசியதாக வெளியான ஆடியோவில், “ராஜபாளையம் வந்து லட்சுமணன் வட்டாட்சியர் (தாசில்தார்) அலுவலகம் செல்வதற்கும், லட்டு கொடுப்பதற்கும் யார் அவருக்கு அதிகாரம் கொடுத்தது? லட்சுமணன் மீது நான் புகார் எழுதி கொடுத்து உள்ளே வைத்து விடுவேன். என்னை ஆரம்பத்தில் இருந்தே சீண்டிக் கொண்டு இருக்கிறார். என் தொகுதிக்குள் அந்தப் பையன் எப்படி வருவான்? நான் தூக்கி வைத்து அடித்துக் கொன்று விடுவேன். என்னை பார்த்தால் பைத்தியம் மாதிரி தெரிகிறதா? என் தொகுதிக்குள் சாத்தூர்க்காரன் ஒருத்தன் காலை வைக்க விட மாட்டேன்” என்று தெரிவித்தார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் தற்போது ஒன்றியச் செயலாளர் ராஜகுரு தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து விருதுநகர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் சின்னப்பன் வெளியிட்ட அறிக்கையில், “கட்சியின் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக பெறப்பட்ட தகவல்கள் மற்றும் புகார்கள் அடிப்படையில், கட்சியின் நலன் கருதி ராஜகுருவைத் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். மேலும் வடமேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் மறு அறிவிப்பு வரும் வரை மாவட்டத் தலைமையைத் தொடர்பு கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக விருதுநகரில் நடைபெற்ற அரசு விழாவின் மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் தன் பெயர் இரண்டாவது இடத்திற்குப் பதிலாக முதலில் இடம்பெற வேண்டும் என்று சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலெக்டரிடம் பேசியது சர்ச்சையான நிலையில் தற்போது அமைச்சர் பேசியதாக ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share