முன்னாள் அமைச்சரும் தற்போதைய திமுக எம்.எல்.ஏ.வுமான வைத்திலிங்கம் (Vaithilingam), ரூ27.90 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் கூடுதல் விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் 2015 -16-ல் முன்னாள் வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம், 1400 அடுக்குமாடி வீடுகள் கட்ட திட்ட அனுமதிக்காக ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் என்னும் நிறுவனத்திடம் இருந்து ரூ27.90 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்து இருந்தது.
ஸ்ரீராம் குழுவின் பாரத் கோல் அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவனம் மூலமாக வைத்திலிங்கம் மகனுக்கு சொந்தமான முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.27.90 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது குற்றச்சாட்டு.
இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை 2024-ம் ஆண்டு செப்டம்பரில் வைத்திலிங்கம் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் இணைந்து வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தியது.
இன்னொரு பக்கம், கடந்த ஜனவரி மாதம் வைத்திலிங்கம் அப்போதைய ஆளும் கட்சியான திமுகவில் இணைந்தார். இதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் வைத்திலிங்கம் மீதான வழக்கை கைவிடுவதாக நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து கடந்த ஜூன் மாதம் சென்னை மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் முறையீடு செய்தது. அத்துடன், வழக்கை கைவிடுவதாக தாக்கல் செய்த அறிக்கையைத் திரும்பப் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையும் மனுத் தாக்கல் செய்தது. அப்போது, வைத்திலிங்கம் மீதான வழக்கை முடித்து வைக்க எதிர்ப்பு தெரிவித்து மனுத் தாக்கல் செய்துள்ளதாக அமலாக்கத்துறையும் தெரிவித்தது.
இந்த நிலையில் தற்போது, வைத்திலிங்கம் மீதான வழக்கை விசாரித்து 3 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
