நாட்டின் புதிய கல்வி அமைச்சராகி இருக்கிறார் பிரகலாத் ஜோஷி (Pralhad Joshi). நீட் தேர்வுக்கு எதிராக நாடு கொந்தளிக்கும் தருணத்தில் மத்திய கல்வி அமைச்சராகி இருக்கிறார் பிரகலாத் ஜோஷி.

பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி எனப்படும் பிரகலாஷ் ஜோஷி, கர்நாடகாவில் பிஜப்பூர் என அழைக்கப்பட்ட தற்போதைய விஜயபுரா நகரில் 1962-ம் ஆண்டு நவம்பர் 27-ந் தேதி பிறந்தார்.
தமது பள்ளிப் படிப்பை ஹூப்பள்ளியில் முடித்த பிரகலாத் ஜோஷி, தார்வாட்டில் உள்ள கர்நாடக பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஹூப்பள்ளியின் கே.எஸ். கலைக் கல்லூரியில் இளங்கலை ”கலை” பட்டத்தை.. பி.ஏ. பட்டத்தைப் பெற்றார்.

தேர்தல் அரசியலில் நுழைவதற்கு முன்பு இளம் பிராயத்தில் இருந்தே இந்துத்துவா அமைப்பான இன்றைய பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். RSS எனப்படும் ராஷ்டீரிய ஸ்யம் ஸேவக் அமைப்பில் இணைந்து பயிற்சிகளைப் பெற்றார்.
ஆர்.எஸ்.எஸ்.-ல் இருந்து எல்லோரையும் போல அதன் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சியில்.. பாஜகவில் இணைந்து, கட்சியின் அமைப்பு ரீதியான பதவிகளில் படிப்படியாக உயர்ந்தார்.
பொதுவாக பாஜக தலைவர்களின் அரசியல் ஏறுமுக பாதையில் எங்கேயே ஒரு ‘பிரச்சனை’ இருக்கும்.. அதாவது ஏதேனும் ஒரு சர்ச்சையின் மூலமாக வெளிப்பட்டவராக இருப்பது வழக்கம்தான்..

பிரகலாத் ஜோஷிக்கும் அப்படி ஒரு வரலாறு இருக்கிறது.. 1990களில் கர்நாடகாவில் பாஜக காலூன்ற முடியாத தருணம்.. அப்போது காங்கிரஸும் ஜனதா- ஜனதா தளம் கர்நாடகாவில் செல்வாக்கு செலுத்திய காலம்..
அப்போது ‘ஹூப்பள்ளி ஈத்கா மைதான’ பிரச்சனையில் பாஜகவை உள்ளே நுழைத்து மிகப் பெரும் வகுப்புவாத பதற்றத்தின் பின்னணியில் இருந்தவர் இந்த பிரகலாத் ஜோஷிதான் என்கின்றன வரலாற்று பக்கங்கள்.
ஹூப்பள்ளி ஈத்கா மைதான சர்ச்சையும் பிரகலாத் ஜோஷியும்
ஹூப்பள்ளியில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானம் உள்ளது. இது முன்னர் ஈத்கா மைதானம் என அழைக்கப்பட்டது. தற்போது கிட்டூர் ராணி சென்னம்மா மைதானம் என்றும் அழைக்கப்படுகிறது.
பாரம்பரியமாக பொது விளையாட்டுப் போட்டிகள், கண்காட்சிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பொது இடம்.
ஆங்கிலேயர் ஆட்சியில் 1921-ஆம் ஆண்டில் ஹூப்பள்ளி நகராட்சிக்கும், ‘அஞ்சுமான்-இ-இஸ்லாம்’ (Anjuman-e-Islam) என்ற இஸ்லாமிய அமைப்புக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் உருவானது.
இதன்படி ஆண்டுக்கு 2 முறை அதாவது ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளின்போது மட்டும் இஸ்லாமியர்கள் ஈக்தா மைதானத்தில் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதர நாட்களில் ஈத்கா மைதானம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான மைதானமாக இருக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் சரத்து.
1990-களில் ஈத்கா மைதானத்தில் அஞ்சுமான்-இ-இஸ்லாம் அமைப்பு ஒரு வணிக வளாகம் அமைக்க முயற்சித்தது என்பது முதல் சர்ச்சை. இதற்கு அந்த மக்களும், பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போதைய கர்நாடகாவில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு இஸ்லாமியர்களுக்கு ஆதரவளித்தது என்பதும் பிரச்சனையானது.
இந்த பிரச்சனையில் தலையிட்ட நீதிமன்றம் இஸ்லாமிய அமைப்பு, கட்டிடம் கட்ட தடை விதித்தது. அத்தகைய கட்டுமானம் சட்டவிரோதம் என்றும் தீர்ப்பளித்தது.
இந்த பின்னணியில் ஈத்கா மைதானம் பொது என்பதால் அங்கே சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்புகள் தீவிரப் போராட்டத்தில் குதித்தன. இந்தப் போராட்டங்களில் முன்னணியில் நின்றவர் இன்றைய தேசத்தின் கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஜிதான்.
ஆனால், இஸ்லாமியர்களின் அஞ்சுமான்-இ-இஸ்லாம் அமைப்பு இது தங்களுக்குச் சொந்தமான இடம் என்று கூறி கொடி ஏற்றுவதை எதிர்த்தது. அப்போதைய மாநில அரசும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி கொடி ஏற்ற தடை விதித்தது.

இதனால் கர்நாடகாவில் மதமோதல் மையம் கொண்டது. இந்துக்களும் இஸ்லாமியர்களும் இருதுருவங்களாக துண்டாடப்பட்ட துயரம் தொடங்கியது. இந்த துயரத்தின் தூண்டுகோலாக இருந்தவர் இன்றைய தேசத்தின் புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஜிதான்.
இன்னும் சொல்லப் போனால் பிரகலாத் ஜோஷி என்ற அரசியல்வாதியின் வெளிப்படையான அரசியல் பயணமே இந்த வகுப்புவாத மோதலில் இருந்தே தொடங்கியது.

அரசின் தடையை மீறி பாஜகவினரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரும் தேசியக் கொடியேற்ற முயல்வதும் அதற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராடுவதும் காவல்துறை தடுப்பதுமான மோதல் போக்கு அதிகரித்தது. இதன் உச்சமாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் கூட நடந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
வடக்கே அயோத்தி ராமர் கோவில் பிரச்சனை தலைதூக்கி ரத்த ஆறு ஓடிக் கொண்டிருந்த போது அதற்கு இணையாக கர்நாடகாவின் ஈத்கா மைதான விவகாரத்தை முன்னிறுத்தியவர்தான் பிரகலாத் ஜோஷி.
ஈத்கா மைதான சர்ச்சையில், மைதானம் ஹூப்பள்ளி-தார்வாட் மாநகராட்சிக்குச் சொந்தமானது என்றும், இஸ்லாமிய அமைப்பான ‘அஞ்சுமான்-இ-இஸ்லாம்’ அமைப்புக்கு ஆண்டுக்கு இரண்டு முறை தொழுகை நடத்த மட்டுமே உரிமை உண்டு என்றும் தீர்ப்பளித்தன. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து பாஜக, இந்து அமைப்பினர் அந்த மைதானத்தில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர். காலப்போக்கில் அந்த மைதானத்தில் அரசு அதிகாரப்பூர்வமாகவும் தேசியக் கொடியை ஏற்றி வருகிறது.
மாநில அரசியலில்…
பாஜகவில் தார்வாட் மாவட்ட தலைவராக பணியாற்ற தொடங்கி, கர்நாடகா மாநில பாஜகவின் பொதுச் செயலாளர், 2013-2016-ம் ஆண்டில் கர்நாடகா மாநில பாஜகவின் தலைவர் என பொறுப்பு வகித்தார்.

தேர்தல் அரசியலில் பிரகலாத் ஜோஷி..
பிரகலாத் ஜோஷி 2004 ஆம் ஆண்டில் தார்வாட்டிலிருந்து முதன்முதலில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அதன்பிறகு நடந்த ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் அந்தத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
தொடர்ச்சியாக 5 மக்களவைத் தேர்தல்களில் தார்வார்ட் தொகுதியில் இருந்து வெற்றி பெற்று வருகிறார்.
அதாவது 2004, 2009, 2014, 2019, 2024 ஆகிய 5 தேர்தல்களிலும் தார்வார்ட் தொகுதியில் இருந்து வென்றுள்ளார் பிரகலாத் ஜோஷி.
2004-ம் ஆண்டு தார்வார்ட் வடக்கு மக்களவைத் தொகுதியாக இருந்த போது போட்டியிட்ட பிரகலாத் ஜோஷி, 83,078 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் தார்வார்ட் தொகுதியாக மாறியது. அந்த தேர்தலில் 1,37,663 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் பிரகலாத் ஜோஷி.
2014-ம் ஆண்டு 1,11,657 வாக்குகள் வித்தியாசத்திலும்
2019-ம் ஆண்டு 2,05,072 வாக்குகள் வித்தியாசத்திலும்
கடந்த 2024 தேர்தலில் 97,324 வாக்குகள் வித்தியாசத்திலும் பிரகலாத் ஜோஷி வென்றார்.
இத்தகைய தொடர்ச்சியான தேர்தல் வெற்றி கர்நாடகாவின் நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் என்ற பெருமையை பிரகலாத் ஜோஷிக்கு தந்தது.

மத்திய அமைச்சராக பிரகலாத் ஜோஷி
2019-ல் பிரதமர் மோடி தலைமையில் 2-வது பாஜக அரசு அமைந்த போது மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றார் பிரகலாத் ஜோஷி.
2019 முதல் 2024-ம் ஆண்டு வரை
- நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்
- நிலக்கரித்துறை அமைச்சர்
- கனிமத்துறை அமைச்சர் பதவிகளை வகித்தார் பிரகலாத் ஜோஷி.
2024 மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக கூட்டணி அரசு பிரதமர் மோடியில் மீண்டும் அமைந்த போது பிரகலாத் ஜோஷிக்கு
- நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை என 2 துறைகள் வழங்கப்பட்டன.
தற்போது நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சையில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததால் 3-வது துறையாக கல்வி துறை அமைச்சராகி உள்ளார் பிரகலாத் ஜோஷி
சர்ச்சைகளும் பிரகலாத் ஜோஷியும்
பாஜகவுக்கும் சர்ச்சைக்குமான தொடர்புகளுக்கு பஞ்சம் இருப்பது இல்லைதான்.. இதில் பிரகலாத் ஜோஷி மட்டும் விதிவிலக்கா என்ன?
பிரகலாத் ஜோஷி மீது பொதுவான ஊழல் புகார்கள் இல்லைதான்.. ஆனால் சர்ச்சைகளின் நாயகனாகவும் இருந்துள்ளார்.
- 2019-2024-ல் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்த போது, முக்கியமான மசோதாக்கள் மீதான விவாத நேரத்தைக் குறைத்ததாக ஜோஷி மீது புகார் சொல்லப்பட்டது.
அதேபோல நாடாளுமன்றத்தில் அமளிகளுக்கு இடையே சட்டங்களை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டுகிறவர் பிரகலாத் ஜோஷி என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. - நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த காலத்தில், வணிக ரீதியான நிலக்கரி சுரங்கங்களை விரிவுபடுத்துவதற்கும் அதிக தனியார் துறை பங்கேற்பை அனுமதிப்பதற்கும் மோடி அரசாங்கம் எடுத்த முடிவு எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் விமர்சனங்களுக்குள்ளாகியது.
- குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த 11 குற்றவாளிகள் கடந்த 2022-ல் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியபோது, அந்த முடிவை மத்திய அரசின் தரப்பில் பிரகலாத் ஜோஷி வெளிப்படையாக நியாயப்படுத்தினார். கைதிகள் தங்களது சிறைவாசக் காலத்தில் உரிய காலத்தை நிறைவு செய்துள்ளதாகவும், சட்ட விதிகளின்படியே இந்தத் தண்டனை குறைப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தது எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

- கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தில் கோவிட்-19 தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகளில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையிலான விசாரணை ஆணையத்தை மாநில அரசு அமைத்தது.
இந்த பெயர் எங்கேயோ கேட்டது போல இருக்கிறதா?

ஆம்… தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தவர்தான் இந்த குன்ஹா. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில் 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவிக்க காரணமாக இருந்ததும் குன்ஹாவின் இந்த தீர்ப்புதான்.
இனி பிரகலாத் ஜோஷிக்கும் குன்ஹாவுக்கும் என்ன பிரச்சனை என பார்ப்போம்..
- கடந்த 2024 கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, குன்ஹா ஆணையத்தைக் குறிப்பிட்ட பிரகலாத் ஜோஷி, நீதிபதி மைக்கேல் டி’குன்ஹாவை வெளிப்படையாக ”காங்கிரஸ் ஏஜெண்ட்” என்று விமர்சித்தார். இது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியதுடன், மாநில அரசு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பையும் சட்ட நடவடிக்கைக்கான எச்சரிக்கையையும் சந்தித்தது. பின்னர் ஜோஷி தன் கருத்துக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதினார்.

- கர்நாடகாவில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் தனது வார இதழில், தார்வாட்டைச் சேர்ந்த சில உள்ளூர் பாஜக பிரமுகர்கள் மற்றும் பிரகலாத் ஜோஷியின் செயலாளரான உமேஷ் துஷி ஆகியோர் ஒரு நகை வியாபாரியை ஏமாற்றி மிரட்டியதாக 2008-ல் ஒரு கட்டுரையை வெளியிட்டார். இதைக் கண்டித்து பிரகலாத் ஜோஷியும் அவரது செயலாளரும் கௌரி லங்கேஷ் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் கௌரி லங்கேஷூக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு நீதிமன்றத்தால் தண்டனையும் வழங்கப்பட்டது. பின்னர் அந்த வழக்கின் மேல்முறையீடு நிலுவையில் இருந்தபோது கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது பள்ளிப் பாடப்புத்தகங்கள் திருத்தப்பட்ட விவகாரம் மாநிலத்தில் கல்வித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாடத்திட்டங்கள் காவிமயமாக்கப்படுவதாகக் காங்கிரஸ் மற்றும் முற்போக்கு அமைப்புகள் குற்றம் சாட்டின. அப்போது பாஜக அரசின் முடிவுகளைத் தீவிரமாக முன்னின்று ஆதரித்த பிரகலாத் ஜோஷி, இந்தக் குற்றச்சாட்டுகள் யாவும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், பாஜக மீதான சித்தாந்த எதிர்ப்பின் காரணமாகவே இத்தகைய விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன என்றும் வாதிட்டார்.
கல்வியை காவிமயமாக்க முடியுமா?
பிரகலாத் ஜோஷி அரசியல் ரீதியாக ஒரு முக்கியமான தருணத்தில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார். மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் மாணவர்களும் எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய கல்வி அமைச்சராகி இருக்கிறார் பிரகலாத் ஜோஷி. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை முழுவீச்சாக பின்பற்றும் பிரகலாத் ஜோஷி, கல்வியை காவிமயமாக்குவதில் முனைப்பு காட்டுவார் என்பதுதான் எல்லோருக்குமான அச்சம்..
ஆனால் 12 ஆண்டுகால மோடி ஆட்சிக்கு எதிரான மக்கள் கோபம் வெளிப்பட துவங்கி இருக்கும் நிலையில் இத்தகைய ‘நெருப்பை தலையில் அள்ளிக் கொட்டி’ தமக்கு தாமே கொள்ளி வைக்கும் முயற்சியை மத்திய பாஜக அரசு அனுமதித்துவிடுமா? மக்கள் இயக்கங்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்குமா? என்பது காலச் சக்கரத்தின் கைகளில்தான் இருக்கிறது.
