பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். (RSS) இயக்கத்தின் தீவிர விசுவாசியான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி-க்கு (Pralhad Joshi) கல்வித் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வித் துறை அமைச்சராக ஒடிஷாவைச் சேர்ந்த தர்மேந்திர பிரதான் பதவி வகித்து வந்தார். நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காக்ரோச் ஜனதா கட்சி தீவிர போராட்டங்களை முன்னெடுத்தது. டெல்லியில் தொடங்கிய காக்ரோச் போராட்டம், நாடு முழுவதும் கிளர்ச்சியாக வெடித்தது.

இதனையடுத்து மத்திய அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். தற்போது அவருக்கு பதிலாக நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகத்துறை மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷிக்கு, கல்வித் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரகலாத் ஜோஷி, “ நாட்டில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தியவர் தர்மேந்திர பிரதான். இந்த புதிய கல்விக் கொள்கையால் நாடு முன்னேற்றம் அடைந்தது.
தற்போது பிரதமர் மோடி என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கி இருக்கிறார். பிரதமர் மோடியின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன்” என்றார்.

யார் இந்த பிரகலாத் ஜோஷி?
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகலாத் ஜோஷி. இளம் வயது முதலே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முழுமையாக இணைந்து செயல்பட்டவர்.
கர்நாடகாவில் பாஜக காலூன்றியதில் முக்கிய பங்களிப்பு செய்தவர்களில் பிரகலாத் ஜோஷியும் ஒருவர். 1990களில் கர்நாடகாவில் மத மோதல்களுக்கு காரணமாக இருந்த ஹூப்ளி ஈட்கா மைதானத்தில் (தற்போது கிட்டூர் ராணி சென்னம்மா மைதானம்) தேசியக் கொடியை ஏற்றும் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். ஆர்.எஸ்.எஸ். நடத்திய ‘காஷ்மீர் பாதுகாப்பு இயக்கத்தையும்’ (Save Kashmir Movement) முன்னின்று நடத்தியவர் பிரகலாத் ஜோஷி. கர்நாடகா மாநில பாஜக தலைவராக 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பணியாற்றியவர்.
தார்வாட் மக்களவைத் தொகுதியில் இருந்து தொடர்ந்து 2004-ம் ஆண்டு முதல் 5 முறை தொடர்ந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி அமைச்சரவையில் ஏற்கனவே நிலக்கரி துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். தற்போது உணவுத் துறை அமைச்சராக உள்ள பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை வழங்கப்பட்டுள்ளது.
