ரூ.100 கோடி கோவில் நிலம் மோசடி: சிபிஐ விசாரணை கோரி பழனியில் அதிமுக போராட்டம்!

Published On:

| By Mathi

AIADMK Protests in Palani Seeking CBI Probe into Rs 100 Crore Temple Land Scam

பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நில பத்திரப் பதிவு மோசடி விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி இன்று ஜூலை 25-ந் தேதி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தையே அதிரவைத்துள்ளது பழனியில் ரூ.100 கோடி கோவில் நில மோசடி. இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மோசடிக்கு காரணமானவர்கள் கைது செய்யப்படவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில் கோவில் நில மோசடி விவகாரத்தை சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி இன்று பழனியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதிமுக பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ.,
அதிமுக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் வி.பி.பி.பரமசிவம், பழனி எம்.எல்.ஏ. ரவிமனோகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் வி.பி.பி.பரமசிவம் பேசியதாவது: தவெக அரசிடம் பொதுமக்கள் லகானை தெரிந்தோ தெரியாமலோ கொடுத்துவிட்டார்கள்; ஆனால் நிர்வாகம் எப்படி செய்வது என்கிற குதிரை ஓட்டுவதற்கான திறமை அவர்களிடம் இல்லையே.. அதற்கான தகுதி, பொறுமை எதுவும் இல்லை.. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ரீல்ஸ் போடுவது மட்டும்தான்.

காவிரி நீர் வரவில்லை என விவசாயிகள் கண்ணீர் விடுகிறார்கள்.. விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை என சாலைகளில் கண்ணீர் விடுகின்றனர் விவசாயிகள்.

ADVERTISEMENT

ஆனால் தவெக அரசின் அனைத்து அமைச்சர்களும் ஜனநாயகன் படத்தின் முதல் நாள் முதல் ஷோ பார்க்கிறார்கள்.. கண்ணீர் விட்டு அழுகிறார்கள்.

ஜனநாயகன் படத்துக்கு போங்கள்.. ஏன் மாலையில் போகக் கூடாதா? இரவு போகக் கூடாதா? அது என்ன முதல் நாள் முதல் ஷோ பார்த்துதான் ஆக வேண்டும் என்பது.. உங்க விசுவாசத்தை காட்டுறதுக்கும் ரசிகர் பாசத்தை காட்டுறதுக்கும் அளவே இல்லையா?

தமிழ்நாட்டு மக்கள் உங்களிடம் மிகப் பெரும் பொறுப்பை கொடுத்ததற்காக வெட்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு பழனியில் நடந்துள்ளது ஒரே ஒரு சம்பவம்.. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல.. இந்த மோசடிக்கு அரசில் இருப்பவர்கள்தான் துணை போயிருக்கிறார்கள்.. ஆனால் அரசின் சிபிசிஐடி விசாரணையே நடத்துமா? அதனால்தான் நாங்கள் சிபிஐ விசாரணை நடத்த சொல்கிறார் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதை அதிமுக அப்படியே விட்டுவிடாது. நாங்கள் நீதிமன்றத்துக்கு போயிருக்கிறோம்.

இன்றைக்கு திரைப்படத்திலே நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிற தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் மாண்புமிகு விஜய் அவர்கள் இன்றைக்கு அரசியலிலும் நடித்துக் கொண்டிருப்பதை முதலிலே நிறுத்த வேண்டும்.

முதல்வர் விஜய், ரியல் முதலமைச்சராக மாற வேண்டும். ரீல் முதலமைச்சராக ஸ்டைல் செய்து கொண்டிருக்கக் கூடாது. இவ்வாறு டாக்டர் வி.பி.பி. பரமசிவம் பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share