ஒன்றியத்தில் பாஜக; தமிழ்நாட்டில் தவெக! செப்புவது கேளாத தேரா மன்னர்கள்!

Published On:

| By ராஜன் குறை கிருஷ்ணன்

neet paper leak BJP at Centre; TVK in Tamil Nadu! Stubborn rulers turn a deaf ear

ராஜன் குறை

வட நாட்டினருக்கு ராமாயணம், மகாபாரதம் போல திராவிட தமிழருக்கு முக்கியமான காவியம் சிலப்பதிகாரம்! அதன் மையப்பொருளும் அரச நீதி குறித்ததுதான். வட நாட்டுக் காவியங்களை விட உயர் விழுமியங்கள் கொண்டது. கோவலனும், கண்ணகியும் புதிய வாழ்க்கை துவங்க பூம்புகாரிலிருந்து மதுரைக்கு வருகிறார்கள். கண்ணகியின் காற்சிலம்பை விற்றுவர கோவலன் செல்கிறான். பாண்டிய நாட்டு அரசியின் காற் சிலம்பும் கண்ணகியுடையது போலவே இருக்கும். அந்த நேரத்தில் அரசியின் காற் சிலம்பு காணாமல் போயிருந்ததால், கொல்லன் கோவலனை அரசனிடம் பிடித்துக் கொடுக்கிறான். காற்சிலம்பு ஒன்றுபோல இருப்பதால் எந்த விசாரணையும் செய்யாமல் கோவலனுக்கு மரண தண்டனை விதித்து விடுகிறான் மன்னன். கண்ணகி அழுது புலம்பிக் கொண்டிருக்காமல், நீதி கேட்க மன்னனிடம் வருகிறாள்.

அரசியின் காற்சிலம்பில் இருப்பவை முத்துப் பரல்கள்; கண்ணகியின் காற்சிலம்பில் இருப்பவை மாணிக்கப் பரல்கள். கண்ணகி அதனை நிரூபித்ததும் மன்னன் குற்ற உணர்ச்சியில் “யானே கள்வன்!” என்று மனம் வெதும்பி உயிர்துறக்கிறான். அரசியும் கூடவே உயிர் துறக்கிறாள். நீதி வழுவினான் என்ற அவச்சொல் தனக்கு வந்தபின் அரசன் உடலில் உயிர் தரிப்பதில்லை. இவ்வாறு நீதி கேட்ட அரசவைக்கு வரும் கண்ணகி அரசனை நோக்கி பேசத் தொடங்கும் போது “தேரா மன்னா! செப்புவதுடையேன்!” என்றுதான் தொடங்குகிறாள். தேராத மன்ன ன் என்பது அறிவுபூர்வமாக ஆராய்ந்து முடிவு செய்யாதவன் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. வேறு வகையில் சொன்னால் நீதிபரிபாலனத்தின் தேர்வில் வெல்லவில்லை என்றும் கூறலாம். செப்புவதுடையேன் என்றால் எனக்கு கூறுவதற்கு சில சங்கதிகள் உள்ளன என்று பொருள்.

ADVERTISEMENT

இன்று ஒன்றியத்தில் ஆளும் பிரதமர் மோடியும் சரி: தமிழ்நாட்டின் சரித்திர விபத்தாக ஆட்சிக்கு வந்துவிட்ட நடிகர் ஜோசப் விஜயும் சரி, தேரா மன்னர்களாகவே உள்ளனர் என்பதுடன் குடிமக்கள் செப்புவதையும் கேட்பதில்லை. சென்ற வாரம் டில்லியில் நடந்த மாணவர்கள் மீதான தாக்குதலும், அதைக்குறித்து பேசவும் மறுக்கும் ஜோசப் விஜய், தமிழ்நாட்டிலும் போராட்டங்களை முடக்குவதும் எந்த மக்களாட்சி மன்னராட்சியைவிட நெறியற்று போயுள்ளது என்பதையே காட்டுகிறது. சென்ற வார நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்வதற்கே இந்த கட்டுரை.

பிஜேபியும், சிஜேபியும் (BJP vs CJP)

மே 15-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கை விசாரிக்கும்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், பொதுவாக வேலையற்ற இளைஞர்கள் செயல்பாட்டாளர்கள் என்ற பெயரில் இணையத்திலும், பல்வேறு அமைப்புகளிலும் ஊடுறுவுகிறார்கள் என்று குறிப்பிட கரப்பான் பூச்சிகளை உவமையாகக் கூறினார். இப்போது அவர் தான் போலிசான்றிதழ்களை பயன்படுத்துபவர்களைத்தான் சொன்னேன் என்று விளக்கமளித்துள்ளார். ஆனால் அவர் பேசியபோது பொதுவாக செயல்பாட்டாளர்களைக் கூறியதாகத்தான் தோன்றியது. இதனால் தூண்டப்பட்ட அபிஜித் தீப்கே என்ற இளைஞர் காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) என்ற அமைப்பை இணையத்தில் துவங்கினார். இது BJP என்பதை கேலி செய்வதாகவும், கரப்பான் பூச்சிகள் என்று கூறப்பட்ட இளைஞர்களின் கோபமாகவும் அமைந்தது. எதிர்பாராத விதமாக அவர் துவங்கிய இணையதளத்தில் பன்னிரெண்டு இலட்சம் பேர் இணைந்தனர்.

ADVERTISEMENT

விளையாட்டாக துவங்கிய இந்த அமைப்பு, அதற்கான ஆதரவு இணையத்தில் பெருகியதால் பல்வேறு பிரச்சினைகளைக் குறித்து கருத்துக்களை தெரிவிக்கத் துவங்கியது. அந்த நேரத்தில் நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் பெரிதானது. அதனால் அமெரிக்காவிலிருந்து நேரடியாக இந்தியா வந்த அபிஜித் தீப்கே, ஜூன் 6-ஆம் தேதி ஜந்தர் மந்தரில் ஒரு தர்ணா போராட்ட த்தைத் துவங்கினார். டில்லியில் உள்ள மாணவர் அமைப்புகள் இணைந்தன. ஜந்தர் மந்தரில் நடக்கும் எத்தனையோ போராட்டங்களில் ஒன்று எனக்கருதிய பாஜக அரசு அதனை இலட்சியம் செய்யவில்லை. பாஜக செப்புவது கேளாத அரசாக இருப்பது புதியதல்ல. ஏற்கனவே குடியுரிமை திருத்தச் சட்ட த்திற்கு எதிரான ஷாஹின்பாக் போராட்டம், விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் ஆகியவற்றையும் உலகமே கவனித்தாலும், தான் கவனிக்காதது போலவேதான் இருக்கும்.  திடீரென்று யாராவது ஒரு சங்க பரிவார அமைப்பை சேர்ந்தவர் அல்லது அமைச்சர் அந்நிய நாட்டு சதி, பிரிவினைவாதிகள் ஊடுறுவல் என்று சொல்லி போராட்ட த்தைக் கொச்சைப் படுத்துவார்.

பொதுவாகவே தேர்தல் மூலமாக பிரதிநிதித்துவ மக்களாட்சி நடப்பதற்குப் பதிலாக தேர்தல் எதேச்சதிகாரமே நடைபெறுகிறது எனலாம். எப்படியாவது நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ பெரும்பான்மை கிடைத்து அரசமைத்துவிட்டால் அடுத்த தேர்தல் வரை தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணமே ஆட்சியாளர்களிடம் மேலோங்கியுள்ளது. பாஜக எந்த பிரச்சினையை குறித்தும் நாடாளுமன்றத்திலும் எதிர்கட்சிகளை பேச விடாது. அப்படியே பேசினாலும் ஆளும் தரப்பு பொறுப்பாக பதில் சொல்லாது. அதன் பிறகு வீதியில் இறங்கி போராடினாலும் அதனை ஒடுக்கவே முயற்சிக்கும். அதிலும் குறிப்பாக பிரதமர் மோடி எந்த பிரச்சினை குறித்தும் வாய் திறந்து பேச மாட்டார். மணிப்பூர் பிரச்சினை கொளுந்துவிட்டு எரிந்தபோது அதைக்குறித்து ஒரு வார்த்தையும் சொல்ல பிரதமர் மறுத்துவிட்டார். மக்களுக்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளோம் என்ற எண்ணமே பாஜக அரசினருக்கு இருப்பதில்லை. பிரதமர் ஊடகங்களை சந்திக்கும் பழக்கமே இல்லாதவர். அவரை யார் கேள்வி கேட்டாலும் அவருக்குப் பிடிக்காது. அவராக நேரடியாக மக்களுடன் “மனதின் பேச்சு” என்ற பெயரில் அவர் விரும்பிய செய்திகளைப் பேசுவார். ஆனால் ஊடகங்களை நெருங்க விடமாட்டார்.

ADVERTISEMENT

அதே பாணியிலேதான் காக்ரோச் ஜனதா பார்ட்டியின் போராட்டத்தையும் கையாள பாஜக முடிவு செய்தது. ஆமாம், நீட் தேரிவில் முறைகேடு நடந்துவிட்டது. குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். விசாரணை செய்கிறோம். தக்க நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி முடித்துக்கொண்டார்கள். ஆனால் தாங்கள் பாடுபட்டு எழுதிய நீட் தேர்வு ரத்து செய்யப்படுகிறது, மீண்டும் தேர்வு எழுதவேண்டும் என்ற செய்தி கேட்ட பல மாணவர்கள் மன அழுத்தம் தாளாமல் தற்கொலை செய்துகொண்டார்கள். தேசிய தேர்வாணையத்தில் முறைகேடுகள் நடப்பது, வினாத்தாள்கள் கசிவது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு முறையும் விசாரணை, தக்க நடவடிக்கை என்று கூறப்படுகிறதே தவிர மீண்டும் அதே தவறு நிகழாமல் இருப்பதில்லை. ஏற்கனவே பாஜக கட்சி மத்திய பிரதேசத்தில் வியாபம் என்ற அரசு தேர்வு நிறுவனத்தின் முறைகேடுகளுக்காக புகழ்பெற்றது. எல்லாம் சேர்ந்து இந்த முறை மாணவர்கள், இளைஞர்களிடையே பெரும் எழுச்சியை தோற்றுவித்தது எனலாம்.    

அந்த நேரத்தில் காக்ரோச் ஜனதா பார்ட்டி என்ற புதிய அமைப்பும் தோன்ற தன்னெழுச்சியாக மாணவர்கள் ஜந்தர் மந்தரில் குழுமத் துவங்கினர். ஜூன் 28-ஆம் தேதி லடாக் மாநில சூழலியல் செயல்பாட்டாளரான சோனம் வாங்க்சுக் மாணவர்களுடன் இணைந்து காலவரையற்ற உண்ணாவிரத த்தைத் துவங்கினார். அவருடன் அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) என்ற அமைப்பின் பிரதிநிதிகளும் உண்ணாவிரதம் துவங்கினர். ஐசாவின் தலைவரான நேகா போரா சிறப்பான பேச்சாளர்; அவர் போராட்டத்தின் முக்கிய முகமாக விளங்கினார்.

போராடுபவர்களின் கோரிக்கை என்பது நிறைவேற்றக் கடினமானது கிடையாது. அவர்கள் ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றார்கள். எப்படி பொறுப்பேற்பது? பாண்டிய மன்னனைப் போல உயிர் துறக்க வேண்டியதில்லை. இந்த தேர்வுகளுக்குப் பொறுப்பாளரான கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்றார்கள். இதனை யாரும் கோராமலே அவராகவே செய்திருக்க வேண்டும். அல்லது பிரதமர் அவருக்கு அறிவுருத்தி இருக்க வேண்டும். அவர் பதவி விலகினாலும் நாடாளுமன்ற உறுப்பினராகத்தான் இருப்பார். என்ன வேலைப்பளு இல்லாமல் நிம்மதியாக இருப்பார். மற்றபடி அவருக்கு எந்த இழப்பும் கிடையாது. குறியீட்டு அளவில் பொறுப்பேற்று பதவி விலகுகிறார் என்பதுதானே தவிர அது ஒன்றும் மிகப்பெரிய தண்டனை கிடையாது.

ஆனால் தேர்தல் எதேச்சதிகார அரசாக இருப்பதால், அடுத்த தேர்தல் வரை மக்கள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம், நாங்கள் நினைத்தைதான் செய்வோம் என்ற மனப்போக்கு இருப்பதால், கல்வி அமைச்சர் பதவி விலகச் சொல்வதை கெளரவப் பிரச்சினையாகவே அரசு கருதியது. அமைச்சரை பதவி விலகச் சொல்ல இவர்கள் யார் என்றுதான் நினைத்தார்கள். நடந்த தவறு எவ்வளவு மோசமானது, எப்படி மாணவர்களின் நம்பிக்கையையும், எதிர்காலத்தையும் பாழாக்குகிறது என்பதைக் குறித்த எந்த நுண்ணுணர்வும், அக்கறையும் அற்றவர்களாகவே ஆட்சியாளர்கள் இருந்தார்கள். இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவதில் நிபுணர். எழுதிய தேர்வு ரத்தானால், மீண்டும் மேலும் சிறப்பாகப் படித்து மறுதேர்வு எழுத வாய்ப்புக் கிடைக்கிறதே என்று மகிழும் மாணவர்களும் இருப்பார்கள் என்று கூறினார்.

சோனம் வாங்சுக்கும், மாணவர்களும் உண்ணாவிரதம் இருக்கத் துவங்கியபிறகு, போராட்ட த்திற்கு ஆதரவு பெருகத் துவங்கியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமன்ற ஆளுமைகளும், கலைஞர்களும் போராட்டக் களத்திற்குச் சென்று போராட்டத்தை ஆதரித்துப் பேசினார்கள். மாலை நேரங்களில் பொதுமக்கள் பெருமளவில் வரத் துவங்கினார்கள். இரவு முழுவதும் பாடல்களும், உரையாடல்களுமாக போராட்டக் களம் உணர்வெழுச்சி பெறத் துவங்கியது. நாளாவட்ட த்தில் சோனம் வாங்சுக் உடல்நிலை சீர்கெட்ட போது நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டன. ஜூன் 17 இரவு வாங்க்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கேயும் உண்ணாநோன்பினைத் தொடர்ந்தார். அரசு தானாகவே இதனை பெரிய கெளரவப் பிரச்சினையாக மாற்றிக் கொண்டது.    

ஜூலை 20, 2026: இந்திய மக்களாட்சி வரலாற்றின் திருப்பு முனையா?

இந்த நிலையில்தான் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூலை 20 அன்று துவங்கியது. ஜந்தர் மந்தரிலிருந்து போராட்டக்கார ர்கள் நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலமாகச் செல்ல முடிவெடுத்தார்கள். எந்த காரணத்திலோ பதட்டமடைந்த அரசு, போலீஸையும், துணை ராணுவத்தையும் சீருடை அணிந்த அடையாளம் தெரியாத, பெயர் வில்லை இல்லாத நபர்களையும் மாணவர்களைத் தாக்க அனுப்பியது. மாணவ மாணவியர் தங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை கலங்காமல் எதிர்த்து நின்ற காட்சிகள் இணையத்தில் நாடெங்கும் பரவியது; மிகப்பெரிய எழுச்சியை நாடு முழுவதும் தோற்றுவித்தது. மும்பாய், கல்கத்தா, பாட்னா, பெங்களூரு என பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன.

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைக் கண்டித்து மறுநாள் ஜூலை 21-ஆம் தேதி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டார்கள். அனைவரும் கைது செய்யபட்டு அகற்றப்பட்டார்கள். ராகுல் காந்தி அவர் முகத்தில் ரத்தம் வழிய குண்டுகட்டாக தூக்கிச் செல்லப்பட்டார். மும்பாயில் கைது செய்யப்பட்டவர்களை கொண்டு செல்லும் காவல்துறை வாகனத்தை ரியா அஹிர் என்ற பெண் தனியாளாக தடுத்து நிறுத்திய காணொலியும் நாடெங்கும் பரவியது. அவரது நேர்காணலை தொலைகாட்சி அலைவரிசைகள் ஒளிபரப்பின.

ஒரு முக்கிய நிகழ்வாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஹரன், விகாஸ் சிங் மற்றும் கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் பொது நல வழக்கில் ஆஜராகி ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது போலீஸ் நட த்திய கொடூர தாக்குதலை விசாரிக்க ஆணையிடச் சொல்லி கோரினர். கோபால் சங்கரநாராயணன் தான் 130 காணொலிகளை பார்த்த தாக க் கூறி எப்படி தேவையற்ற கொடூர வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட து என்பதை விவரித்தார். ஆணிகள் பொருத்திய தடிகள், மின்சாரம் பாய்ச்சும் தடிகள், பெல்லட் குண்டுகளைச் சுடும் துப்பாக்கிகள் என்று அனுமதிக்கப் படாத கொடூர ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்று குற்றம் சாட்டினார். போராடிய பெண்கள் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டனர், அவர்கள் பாலுறுப்புகளில் தாக்கப்பட்டனர் என்றார். மேலும் பெயர் வில்லை அணியாத அடையாளமற்ற நபர்களும் சீருடையில் இருந்ததை சுட்டிக்காட்டினார். நீதியரசர்கள் வழக்கை அனுமதித்து டில்லி காவல்துறையையும், ஒன்றிய அரசையும் பதில் அளிக்கச் சொல்லியிருக்கிறது.

ராகுல் காந்தியும் பெல்லட் குண்டால் தாக்கப்பட்ட மாணவர்களை ஊடகங்களுக்குக் காட்டினார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு மாணவர்கள் எதனால் அப்படி தாக்கப்பட்டார்கள், அதற்கு உத்திரவிட்டது யார் என்று கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.  

இத்தனைக்கும் பிறகு நாடெங்கும் போராட்டங்கள் வெடித்த பிறகு, பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோஹர் ஜோஷியே கண்டனம் தெரிவித்த பிறகு, வேறு வழியில்லாமல் 25-ஆம் தேதி தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். காக்ரோச் ஜனதா கட்சியுடன் பேசிய பாஜக பிரதிநிதிகள் அவர்களது மற்ற கோரிக்கைகளான நீட் பிரச்சினையால் உயிரிழந்த மாணவர் குடும்பங்களுக்கு ஒரு கோடி நஷ்ட ஈடு, போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப ப் பெறுதல் ஆகியவற்றையும் ஏற்றுக் கொள்வதாக க் கூறியுள்ளனர்.

அரசின் அடக்குமுறைக்குப் பணியாமல் மாணவர்கள் போராடி வென்றது மிக முக்கியமான அரசியல் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. பாஜக அரசின் மீது நாடு முழுவதும் அதிருப்தி பரவியுள்ளது. போராடிய பல மாணவர்களின் பெற்றோர்கள் பாஜக ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இப்போது அவர்களே மனம் மாறிவிட்டார்கள்; அரசின் மீது கோபத்தில் இருக்கிறார்கள் எனப்படுகிறது. நரேந்திர மோடி அரசின் முடிவின் துவக்கம் என்றே பலரும் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் மோடி மாடல் எதேச்சதிகாரியாக விளங்கும் ஜோசப் விஜய்

மோடி தலைமையிலான பாஜக அரசினை தனது ரோல் மாடலாக க் கொண்டு எதேச்சதிகார ஆட்சி செய்கிறார் ஜோசப் விஜய். நாட்டில் எந்த பிரச்சினை நடந்தாலும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார். தொடர்ந்து லாக் அப் மரணங்கள், பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன. அவர் எது குறித்தும் பேசுவதில்லை. பழனி கோயில் நிலம் மோசடியாக திட்டமிட்டு விற்கப்பட்ட து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அமைச்சர்கள் பொறுப்பேற்பதில்லை; விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கின்றனர். விஜய் வழக்கம்போல மெளனம்.

டில்லியில் இத்தனை போராட்டம் நடக்கும்போது காங்கிரஸிற்கு கூட்டணி அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ள தவெக அமைதியாக இருக்கிறது. முதல்வரும், ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஜன நாயகன் படம் பார்த்து உணர்ச்சிப் பெருக்கில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், சென்னையிலும் ஜந்தர் மந்தர் போராட்டத்தை ஆதரித்து மாணவர் போராட்டங்கள் நடப்பதைப் பற்றி தவெக கவலையே படவில்லை. ஜன நாயகன் சினிமா ரிலீஸ்தான் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. ராகுல் காந்தியே கைது செய்யப ட்டபோதுதான், சற்றே நாசூக்காக பாஜக பெயரையே சொல்லாமல் ஒரு மென்மையான கண்டன அறிக்கை வெளியிட்டார்கள்.

பல இடங்களில் போராடும் மாணவர்கள், அரசியல் கட்சி தலைவர்களை தவெக அரசின் காவல்துறையும் கடுமையாகத் தாக்கியுள்ளது. போராடுவதை தடுத்துள்ளது. அமைச்சர் ராஜமோகன் தெருவில் போராடக் கூடாது என்ற அபூர்வமான  தத்துவத்தைக் கூறியுள்ளார். போராட்டம் என்றாலே தெருவில் இறங்கி போராடுவதுதானே.

முதல்வரைக் கண்டித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்படுகிறார். பிணையின்றி காவலில் வைக்கப்படுகிறார். முதல்வரை விமர்சித்து இணையத்தில் எழுதுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். எதேச்சதிகார ஆட்சி தலைவிரித்து ஆடுகிறது. ஊடகங்களை சந்திக்க திராணியும், துணிவும் இல்லாத பொம்மை அரசர் தான்தோன்றித்தனமாக ஆட்சி செய்கிறார். அப்பட்டமான அரசியல் வன்மத்தில் சென்ற ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டங்களின் பெயர்களை தேவையில்லாமல் மாற்றுகிறார்.

தி.மு.க ஆட்சியின் தனிப்பெரும் சாதனையான காலை உணவுத் திட்டத்திற்கு “மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்” என்று பெயர் வைத்திருக்கலாம். ஆனால் தி.மு.க அரசு “முதல்வரின் காலை உணவுத்திட்டம்” என்றுதான் பெயர் வைத்தது. அதைக்கூட சகிக்க முடியாத அரசியல் வன்மத்தால் அந்த திட்ட த்திற்கு “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம்” என்று பெயர் மாற்றியுள்ளார்கள். இது காமராஜருக்கே புகழ் சேர்க்காது என்பதுதான் சோகம். அவர் செய்த சாதனைகளுக்காக அவர் என்றும் போற்றப்படுவார். செய்யாத சாதனைகளை அவர் பெயரில் கூறுவது தேவையற்றது.

நீட் தேர்வு முறைகேடுகள் நாடெங்கும் கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினையாக இருக்கும்போது மெளனமாக இருப்பது. தன்னை விமர்சிப்பவர்கள் மீது அடக்குமுறையை செலுத்துவது, கைது செய்வது. எந்த சீர்கேடுகளுக்கும் பொறுப்பெடுக்காமல் இருப்பது என்று இரண்டே மாத த்தில் மிக மோசமான எதேச்சதிகாரியாக உருவாகியுள்ளார் ஜோசப் விஜய். ஒன்றியத்தில் மோடியை எதிர்த்துப் போராடும் காங்கிரஸ் தமிழ்நாட்டில் விஜய்க்கு முட்டுக்கொடுப்பது அவர்கள் அரசியலுக்கு வலுச்சேர்க்காது. தி.மு.க மீது வன்மம் கொண்ட சிறுமதியாளர்களின் தூண்டுதலால் ராகுல் காந்தி எடுத்த முடிவு தவறானது என்பதை அவர் விரைவில் உணர வேண்டும்.     

Photo of author
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share