நாடாளுமன்ற மக்களவையில் தேர்வு முறைகேடுகளை தடுக்க வகை செய்யும் பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்தச் சட்டம், 2026 (Public Examinations (Prevention of Unfair Means) Amendment Bill, 2026) தாக்கல் செய்யப்பட்டது.
நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ பதிவில், “வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்;இது தொடர்பான புதிய திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும்” என உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்தச் சட்ட மசோதா, 2026-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் மக்களவையில் இன்று ஜூலை 27-ந் தேதி பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங், பொதுத் தேர்வுகள்- (முறைகேடு தடுப்பு) திருத்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவை அறிமுகப்படுத்த குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்களவை அனுமதி வழங்கியது.
மத்திய அரசின் புதிய மசோதாவில்,
- தேர்வு மோசடியில் ஈடுபட்டால் அதிகபட்ச தண்டனை 10 ஆண்டுகள்.
- தேர்வு மோசடி வழக்கில் அதிகபட்ச அபராத தொகை ரூ.10 கோடி
- தேர்வு மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இம்மசோதாவை ஜிதேந்திர சிங் தாக்கல் செய்த போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
