தமிழ்நாடு முதல்வர் விஜய், கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவது உச்சநீதிமன்ற உத்தரவை வீணடிப்பதாகும் என்று முன்னாள் அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வேலூர் காட்பாடியில் இன்று ஜூலை 27-ந் தேதி செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது: முதல்வர் விஜய் எதற்காக பெங்களூர் போகிறார் என்பதை அவர் இன்னும் ஒரு அறிக்கையாகவோ செய்தியாகவோ வெளியிடவில்லை.
காவிரி விவகாரத்தில் 2 பிரச்சினைகள் உள்ளன.
- நமக்கு மாதாந்திர வாரியாக கொடுக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா கொடுக்கவில்லை; அதை முதலமைச்சர் விஜய் கேட்கப் போகிறாரா?
- மேகதாது அணை கட்டுவது பற்றி பேச போகிறாரா?
இதில் எதைப் பற்றி பேசப் போகிறார் என தெரியவில்லை.
கர்நாடகாவிடம் நாம் நேரடியாக காவிரி உரிமையை கேட்பதன் மூலம் உச்சநீதிமன்றத்தினுடைய உத்தரவே வீணாகிவிடும்.
உச்சநீதிமன்றம் மாதந்தோறும் தண்ணீர் வழங்க வேண்டும் என்று தெளிவாக உத்தரவு போட்டிருக்கிறது. அதில் ஏதாவது பிரச்சினை என்றால், காவிரி மேலாண்மை வாரியம் இருக்கிறது, அவங்ககிட்ட போய் சொல்ல வேண்டும். அதேபோல காவிரி ஒழுங்காற்றுக் குழு இருக்கிறது, அவர்களோடு பேசலாம்.
அப்படி இரண்டுமே கேள்வி கேட்கவில்லை என்கிற போது மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஒன்று இருக்கிறது, அவர்களிடம் போய் சொல்லலாம்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தினுடைய கையில் தான் அது இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஏன் நீங்கள் மாதவாரியாக காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு கொடுக்கவில்லை என்று கேட்க அவர்களுக்குத்தான் அதிகாரம் உண்டு.
நாங்களே பேசித் தீர்த்துக்கொள்கிறோம் என்று சொல்லி உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செல்லாததாக்கிவிடக் கூடாது என்பதுதான் நமது வேண்டுகோள்.
நாம் யாரும் கர்நாடக அரசிடம் போய் நிற்பதில்லை. எங்களுடைய ஆட்சி காலத்தில்கூட இந்த மாதிரி சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் நாங்கள் யாரும் கர்நாடகாவுக்கு போகவில்லை. ஏனென்றால், நமக்கு உச்சநீதிமன்றம் மூலம் அதிகாரம் மற்றும் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் போய் கெஞ்சத் தேவையில்லை. நாம் பேசவேண்டியது காவிரி மேலாண்மை வாரியம், மத்திய நீர்வள ஆணையம் மற்றும் மத்திய அமைச்சர்களிடம் தான்.. கர்நாடகாவிடம் போய் எங்களுக்குத் தண்ணீர் விட்டுவிடுவீர்களா? என்று கேட்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவையே செல்லாததாக்கிவிடும்.
கர்நாடகாவுக்கு செல்வதற்கு முன்பு, சட்டமன்றத்தில் இருக்கிற எதிர்க்கட்சிகளை அழைத்து முதல்வர் ஆலோசனை செய்திருக்க வேண்டும்; ஆனால் அதைச் செய்யவில்லை.
காவிரி பிரச்சனையில் அமைச்சர்களும் முதலமைச்சரும் மிகுந்த எச்சரிக்கையோடும் அடக்கியும் வாசிக்க வேண்டும். முதலமைச்சர் போய்விட்டு வந்த பின்னர்தான் உண்மை நிலை என்னவென்று முழுமையாகத் தெரியும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
