தமிழகத்தில் மகளிர் உரிமை தொகையை மாதம் தோறும் ரூபாய் 2500 ஆக உடனடியாக உயர்த்தி வழங்க முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உளளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையனிடம், “தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ரூ. 2,500 மகளிர் உரிமைத் தொகை இந்த நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்றப்படுமா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தின் நிதிநிலை எப்படி இருக்கிறது என்று உங்களுக்குத் தெரிகிறதா, இல்லையா? ஆவலோடு எதிர்பார்த்தால் மட்டும் போதாது; வீட்டில் இரண்டு பிள்ளைகள் இருந்தால் உடனே ஒரே நேரத்தில் கல்யாணம் செய்து வைத்துவிட முடியுமா? தமிழகத்திற்கு 13 லட்சம் கோடியே 32 லட்சம் கடன் உள்ளது. இதையெல்லாம் சரிசெய்ய வேண்டாமா? முந்தைய ஆட்சியில் ரூ. 1,000 தருவதாகக் கூறிவிட்டு எப்போது கொடுத்தார்கள்? இப்போது எங்களிடம் மட்டும் வந்து உடனே கேட்டால் எப்படி?” என்று கேள்வி எழுப்பினார்.
செங்கோட்டையனின் இந்த கருத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,”மகளிர் உரிமைத் தொகையை தவெக அரசு மேலும் முடக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது!
தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறுதியின் படி “ரூ. 2500 மகளிர் மாத உரிமைத் தொகை”யை எப்பொழுது வழங்குவீர்கள் என்ற கேள்விக்கு, “தமிழகத்தின் நிதிநிலை தெரியுமா? ரெண்டு பிள்ளைங்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்ய முடியுமா? முந்தைய ஆட்சியில் 2 வருடம் கழித்துத் தானே கொடுத்தார்கள், எங்கள மட்டும் ஏன் இப்போவே கேக்குறீங்க?” என்றெல்லாம் அலட்சியத்துடன் பதிலளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு முற்றிலும் பொறுப்பற்றது.
முந்தைய அரசின் அட்டூழியங்களைப் பொறுக்க முடியாமல் தான், “மாற்றம் தருவோம்” என்று மன்றாடிக் கேட்ட தவெகவினை மக்கள் அரியணையில் அமர்த்தினார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு “போன அரசு லேட்டாகத்தானே மகளிர் உரிமைத் தொகையை கொடுத்தது, நாங்கள் மட்டும் ஏன் சீக்கிரம் கொடுக்க வேண்டும்” என்ற தொனியில் தவெக அமைச்சர் பேசுவது, “திமுகவும் தவெகவும் வெவ்வேறு இல்லை” என்ற உண்மையை மீண்டுமொருமுறை உரக்க உணர்த்துகிறது. நம்பி வாக்களித்த மகளிரை அவமதிப்பது போலானது.
அதிலும் ஏதோ புதியதாக கண்டுபிடித்ததைப் போல “தமிழகம் கடனில் இருக்கிறது” என்று கூறி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவெக அரசு கிடப்பில் போட முயல்வது, ஏமாற்றுத் தனத்தின் உச்சம். தேர்தல் அறிக்கையைத் தயார் செய்கையில் தமிழகத்தின் நிதிநிலை என்னவென்பது தவெகவிற்கு தெரியாதா? ஆண்டுதோறும் வெளியிடப்படும் நிதிநிலை அறிக்கையைக் கூட வாசிக்காமல் தான், “ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என்று விஜய் மக்களிடம் கெஞ்சிக் கேட்டாரா? யாரை ஏமாற்ற முயற்சிக்கிறது தவெக அரசு?
எனவே, இதுபோன்ற சாக்கு போக்குகள் எல்லாம் இனி இங்கே எடுபடாது. கொடுத்த வாக்கின்படி ரூ. 2500 மகளிர் மாத உரிமைத் தொகையை உடனடியாக வழங்க முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
