”டெல்லிக்கு வர வேண்டாம்”: முதல்வர் விஜய்யிடம் வைகோ வேண்டுகோள்!

Published On:

| By Kavi

எனது நூல் வெளியீட்டு விழாவிற்கு வருவதைத் தவிர்த்துவிடலாம் என்று முதல்வர் விஜய்யிடம் கூறியுள்ளதாக வைகோ பேட்டி அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரைகள் அடங்கிய “VAIKO IN PARLIAMENT” என்ற 4 பாகங்கள் கொண்ட புத்தக வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 4 அன்று டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெறவுள்ளது. இந்த நூலை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட முதல்வர் விஜய் பெற்றுக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்தசூழலில் இன்று (ஜூலை 27) தலைமைச் செயலகத்துக்கு வந்து முதல்வர் விஜய்யைச் சந்தித்துப் பேசினார் வைகோ.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, ”புதுடெல்லியில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார் என கேள்விப்பட்டதிலிருந்து கணக்கில் அடங்காதவர்கள் அலைபேசியில் பேசியோர், நேரில் வந்தோர், நண்பர்கள் மூலம் தகவல் அனுப்பியோர்… ‘நாங்களும் அங்கே வர வேண்டும், எங்களுக்குத் தனி அனுமதிச் சீட்டு கொடுப்பீர்களா?’ என்று கேட்டனர்.

ADVERTISEMENT

ஆயிரம் ஆயிரம் பேர் வந்தால் அந்த மண்டபத்தில் இடமில்லை. 700 பேர் தான் பங்கேற்க முடியும். பல்லாயிரக்கணக்கில் வருவார்களானால் அது நிகழ்ச்சியை நடத்துவதில் சங்கடத்தை ஏற்படுத்தும்.

எனவே, நம்முடைய முதலமைச்சர் வருகிறபோது கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும் என்பதனை நான் ஆழமாக யோசித்து, முதல்வர் அந்த நிகழ்ச்சியிலே பங்கெடுப்பதைத் தவிர்த்து விடலாம் என்று கருதி, அவரிடம்… ‘இந்தச் சிரமங்கள் இருக்கின்றன, பல்லாயிரக்கணக்கில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு வெள்ளமாகத் திரண்டு வந்துவிட்டால் அங்கே பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்ய முடியாது. நான் உத்தேசித்திருக்கக்கூடிய இந்த நூல் வெளியீட்டு நிகழ்வையும் நாங்கள் நடத்த முடியாமல் போய்விடும். எனவே அதற்கு நீங்கள் வருவதைத் தவிர்ப்பது நல்லது என்று நான் கருதுகிறேன்’ என்று கூறிவிட்டேன்.

ADVERTISEMENT

ஆனால் அதே நூல்கள் தமிழிலே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இன்னும் ஒரு மாதத்திற்குள் அந்த மொழியாக்கம் முடிந்துவிடும். தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட அந்த நூலை நீங்கள் சென்னையில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். மகிழ்ச்சியோடு ‘அவசியம் அதில் நான் கலந்து கொள்கிறேன், நான் வெளியிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டார்.

தற்போது டெல்லியில் நடக்கும் விழாவில் ராகுல் காந்தி நூலை வெளியிடுகிறார். உத்தரப் பிரதேசத்தினுடைய முன்னாள் முதலமைச்சர், நண்பர் அகிலேஷ் யாதவ் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார்” என்று கூறினார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share