எ.வ.வேலு வழக்கு : தமிழக அரசின் அப்பீல் மனு டிஸ்மிஸ் – உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

Published On:

| By Pandeeswari Gurusamy

EV Velu

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்தை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது. மேலும் எ.வ.வேலுவின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிட கோரிய தமிழ்நாடு அரசின் கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

திமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ.வேலு பதவி வகித்தபோது, கரூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சாலைப் பணிகளை மேற்கொள்ளாமலேயே, தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு முன்கூட்டியே பல கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக ‘அறப்போர் இயக்கம்’ புகார் அளித்திருந்தது. இந்த புகாரின் அடிப்படையில், கடந்த ஜூன் 25-ஆம் தேதி எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

ADVERTISEMENT

இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்து (FIR), தேடப்படும் நபராக அறிவிக்கும் ‘லுக் அவுட்’ நோட்டீஸையும் பிறப்பித்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு:

தம் மீதான வழக்கையும், லுக் அவுட் நோட்டீஸையும் ரத்து செய்யக்கோரி எ.வ.வேலு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரரித்த நீதிபதி இளந்திரையன், எ.வ.வேலு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன், லுக் அவுட் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும், அதுவரை அவர் மீது வரும் ஜூலை 28ம் தேதி வரை கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு:

உயர் நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராகத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவில் கோரப்படாத ஒரு நிவாரணத்தை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவாக வழங்கியுள்ளது என்றார். இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர், “விசாரணை தொடங்கியவுடனேயே எதிர்மனுதாரர் சிங்கப்பூர் சென்று தங்கிவிட்டார்” என்று வாதிட்டார்.

ADVERTISEMENT

நீதிபதிகள் எழுப்பிய சரமாரி கேள்விகள்:

இதனைக் கேட்ட நீதிபதிகள், “தற்போது அவர் சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பிவிட்டாரே? அவரிடம் விசாரணை நடத்துவதில் உங்களுக்கு இப்போது என்ன பிரச்சனை இருக்கிறது? அவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ளாரே, இதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா?” என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் சிங்வி, “எ.வ.வேலு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிடுவதோடு, அவருடைய பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு:

லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், எ.வ. வேலுவை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை, அவர் தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் ஒப்படைப்பு உள்ளிட்ட உங்கள் தரப்பு வாதங்கள் எதுவாக இருந்தாலும், அதனை சென்னை உயர் நீதிமன்றத்திலேயே முன்வைத்துக் கொள்ளலாம். இப்போது இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என்று கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share