திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்று காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தில் த.வெ.க ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்களிடம் தி.மு.க நிர்வாகிகள் பேரம் பேசி ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கடந்த 10ம் தேதி கரூர் சென்ற முதல்வர் தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசுகையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் எ.வ வேலு ஆகியோரின் பெயரை குறிப்பிடாமல் ஓடு ஓடு ஓடு என்ற பாடலை பாடி விமர்சித்திருந்தார். அன்றைய தினமே செந்தில் பாலாஜி கரூர் சம்பவத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு…”என்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி தி.மு.க-வைச் சேர்ந்த செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் திருவல்லிக்கேணி நீதிமன்றம் ஏற்கனவே சமன் அனுப்பியிருந்தது.
உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன்:
இதற்கிடையே, இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. எனினும், தற்போது வரை செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமாரும் இதுவரை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவில்லை.
காவல் துறையினருக்கு பரபரப்பு கடிதம்:
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் துறையினருக்கு செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து முக்கிய கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், “காவல்துறையினர் பதிவு செய்துள்ள இந்த வழக்கில் எனது பெயரோ அல்லது எனது சகோதரர் அசோக்குமாரின் பெயரோ முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை. வழக்கில் பெயரே இல்லாத போது எங்களை எப்படி விசாரணைக்கு ஆஜராகும்படி கூற முடியும்? எனவே, சட்ட நடைமுறைகளின்படி எனக்கு 35 Clause (3) BNS பிரிவின் கீழ் முறையான நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும்.
நான் இந்த வழக்கின் கீழ் விசாரணைக்கு ஆஜராகும் பட்சத்தில், பழிவாங்கும் நோக்கில் என்னை வேறு எந்த வழக்கிலும் கைது செய்யக்கூடாது என உறுதி அளிக்க வேண்டும்.
நான் ஒரு மக்கள் பிரதிநிதி மட்டுமல்ல, தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் ஒரு தொழிலதிபர். நான் சட்டத்திற்குப் பயந்து எங்கும் ஓடி ஒளியவில்லை. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நான் கையெழுத்திட அல்லது விசாரணைக்கு ஆஜராகும் போது, எனக்குத் தேவையான மருத்துவ வசதிகளைச் செய்து தர வேண்டும்.
அமைச்சர் மீது குற்றச்சாட்டு:
கரூரில் அண்மையில் நிகழ்ந்த 41 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம் தொடர்பாக, தேவையின்றி என்னைச் சம்பந்தப்படுத்தி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பிற அமைச்சர்கள் பொதுவெளியில் மிரட்டும் தொனியில் பேசி வருகின்றனர். கரூர் சம்பவத்தை முன்வைத்து, எனது ஆதரவாளர்களைத் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.” இவ்வாறு அந்த கடிதத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
