கீழடி வரிசையில் இணையும் மலையடிப்பட்டி! புதிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

Published On:

| By Pandeeswari Gurusamy

திராவிட மாடல் அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் தவெக அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஜூலை14) தனது எக்ஸ் பதிவில், “தென்காசி மாவட்டம், மலையடிப்பட்டியில் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுப் பணிகளை நேற்று நேரில் பார்வையிட்டு, அங்கு கண்டறியப்பட்டுள்ள தொல்பொருட்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் குறித்து தொல்லியல் ஆய்வாளர்களிடம் கேட்டறிந்தேன்.

ADVERTISEMENT

மக்கள் வாழிவிடப் பகுதியில் அமைந்திருந்த ஈராயிரம் ஆண்டுகள் பழமையான செங்கல் படிக்கட்டுக் கிணறு, கீழடியின் கண்டுபிடிப்புகளுக்கு ஒத்த கட்டுமானச் சுவடுகள், கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்களின் கண்டுபிடிப்பு, இப்பகுதியின் தொன்மையையும் வரலாற்றுச் சிறப்பையும் வெளிப்படுத்துகிறது.

வரலாற்றில் பல்வேறு காலங்களில் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளைக் கொண்டுள்ள தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி அகழாய்வு, கீழடி மற்றும் ஆதிச்சநல்லூரைப் போல தமிழ்நாட்டின் தொன்மையான வரலாற்றுக்கு புதிய வெளிச்சம் பாய்ச்சும் முக்கியத்துவம் வாய்ந்த அகழாய்வாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

ADVERTISEMENT

தமிழ் நிலப்பரப்பின் தொன்மையையும், தமிழர் நாகரிகத்தின் வரலாற்றையும் அறிவியல் சான்றுகளுடன் உலகிற்கு எடுத்துரைக்கும் இதுபோன்ற தொல்லியல் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.” என தெரிவித்திருந்தார்.

தங்கம் தென்னரசுவின் இந்த பதிவை மேற்கோள் காட்டி அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம்! தடங்கல் எதுவரினும், வரலாற்று உண்மையை நிறுவுவோம்!

Dravidian Model அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும்.

தமிழரின் வரலாற்றையும் நமது பண்பாட்டையும் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும் வருவதோடு, வரலாற்றைத் திரிபுவாதங்களால் திசைதிருப்பும் சூழ்ச்சிகளும் அரங்கேறும் காலத்தில், தமிழ்த்தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை!

மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கிலிருந்து தொடங்கி எழுதுவோம்!

வரலாற்றில் பெருமிதம் கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைத்திடவும் பலம் பெறுவோம்!” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share