உள்ளாட்சி தேர்தலில் சிபிஐ தனித்து போட்டியா? மின்னம்பலத்திடம் மு.வீரபாண்டியன்

Published On:

| By Pandeeswari Gurusamy

M.Veerapandian

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கூட்டணி மற்றும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தான கட்சியின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆளுநர் மூலமாக ஆட்சி அமைப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, விஜய் தலைமையிலான அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. மேலும், திமுக கூட்டணியில் இனி இடதுசாரிகள் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

ADVERTISEMENT

இந்தச் சூழ்நிலையில், “இடதுசாரி கட்சிகளின் உண்மையான பலத்தை அறிய வேண்டிய தேவை நமக்கு உள்ளது. எனவே, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவோம். தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியதாகச் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து நமது மின்னம்பலம் அவரை நேரடியாகப் தொடர்பு கொண்டு கேட்டபோது, “”நாம் உருவாக்கியுள்ள ‘இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு’ என்பது தேர்தலுக்கானது அல்ல; அது தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கானது. இனி இடதுசாரிகள் தங்களுக்கான தனித்துவமான அரசியல் பயணத்தை மேற்கொள்வார்கள். நாட்டை இடது பக்கம் திருப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

ADVERTISEMENT

உள்ளாட்சித் தேர்தலோ அல்லது இடைத்தேர்தலோ வரும்போது அது குறித்து நாம் விரிவாகப் பேசுவோம். அப்போதும் கூட்டணி குறித்து கட்சிதான் இறுதி முடிவு செய்யும். அதேநேரம், அரசியல் சூழல் காரணமாகத் தனித்துப் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கும் கம்யூனிஸ்டுகள் தயாராகவே இருக்கிறோம். எங்களுக்கு நாடு முழுவதும் வலுவான கட்டமைப்பு உள்ளது; எங்களை நம்பி வாக்களிக்கும் மக்களும் இருக்கிறார்கள்.” இவ்வாறு மு.வீரபாண்டியன் விளக்கம் அளித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share