சொத்து தகராறில் சகோதரரை தாக்கிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் அமைச்சர் மரிய வில்சன் என்று நேரில் ஆஜரானார்.
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் 2022 ஆம் ஆண்டு, புதுச்சேரியில் உள்ள தனது தம்பி வீட்டுக்குள் புகுந்து தாக்கியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது.
இது தொடர்பாக அமைச்சர் மரிய வில்சன் சகோதரர் மரிய க்ளோத் புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சேரலாதன் முன் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று பலமுறை உத்தரவிட்டும் நிதி அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய கேட்டும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இது குடும்ப பிரச்சினை என்பதால் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச மையத்திற்கு வழக்கை அனுப்பி வைத்தார்.
அதோடு நிதி அமைச்சர் மரிய வில்சன், தந்தை நெஸ்டர் வில்சன், சகோதரர் மரிய க்ளோத் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன்படி மரிய வில்சன் உள்ளிட்டோர் இன்று சமரச தீர்வு மையத்தில் ஆஜரானார்கள். அப்போது சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சமரச பேச்சுவார்த்தை நீடித்தது.
எனினும் இன்றைய தினம் பேச்சு வார்த்தை நிறைவடையாததால் விசாரணை ஜூலை 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் மரிய வில்சன் உள்ளிட்டோர் நேரில் மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
