பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் விஜய்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக வெற்றிக் கழக தலைவரும் முதல்வருமான விஜய் இன்று (ஜூலை 13) தனது பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற விஜய் கடந்த மே.10ம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர் முறைப்படி திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில் கடந்த ஜூன் 1ம் தேதி திருச்சி சென்ற விஜய் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து கரூர் பெருந்துயர் சம்பவத்திற்குப் பின், கடந்த 10-ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு நேரில் சென்ற முதல்வர் விஜய், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலைக்கான ஆணைகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து இன்று சென்னை பெரம்பூர் தொகுதிக்கு வருகை தந்த முதல்வர் விஜய், அங்கு தனது புதிய சட்டமன்ற உறுப்பினர் (MLA) அலுவலகத்தைத் திறந்து வைத்தார். மேலும், அந்த அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தையும் அவர் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.

ADVERTISEMENT

அதன் தொடர்ச்சியாக, பெரம்பூர் சர்மா நகர் 10-ஆவது தெருவில் உள்ள நியாய விலைக் கடைக்கு நேரில் சென்று முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வந்திருந்த பயனாளிகளுக்குப் புதிய குடும்ப அட்டைகளை வழங்கிய அவர், பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களையும் நேரடியாக விநியோகம் செய்தார்.

இறுதியாக, பெரம்பூர் தொகுதி மேம்பாட்டிற்காகக் கொண்டு வரப்படவுள்ள ரூ.100 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து, அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்தத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ADVERTISEMENT

முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக இன்று விஜய் பெரம்பூர் சென்றுள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share