விஜய்யை முகநூலில் விமர்சித்த திமுக பிரமுகர் கைது

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து முகநூலில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்ட திமுக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் கரூர் பெருந்துயர சம்பவத்திற்கு பின்னர் முதல் முறையாக கடந்த 10-ஆம் தேதி அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார். கரூரில் தவெக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் விஜய் திமுக குறித்தும் செந்தில் பாலாஜி குறித்தும் கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.

ADVERTISEMENT

விஜய்யின் விமர்ச்சனத்திற்கு செந்தில் பாலாஜியும் தனது முகநூல் பதிவின் மூலம் பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் குளித்தலை அருகே பரளி கிராமத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை என்ற தங்கமணி , சமூக வலைதளமான முகநூலில் முதல்வர் விஜயை மிகவும் தரக்குறைவாகவும் ஆபாசமான வார்த்தைகளாலும் விமர்சித்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து குளித்தலை தமிழக வெற்றிக் கழகத்தின் நகர செயலாளர் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில், முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக பிரமுகர் தங்கமணியைக் குளித்தலை போலீசார் கைது செய்தனர்.

ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட தங்கமணி இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆவார். அவர் கைது செய்யப்பட்ட விபரமறிந்து குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், ஒன்றிய செயலாளர் தியாகராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, போலீசார் தங்கமணியைக் குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அவர் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்பதைக் கருத்தில் கொண்டு, அவருக்குப் பிணை (ஜாமீன்) வழங்கி உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share