தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து அச்சிட்டு விநியோகம் செய்யும் பணியை செய்து வருகிறது.
இந்தநிலையில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக லயோலா மணியை நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான பணி நியமன ஆணையை முதல்வர் விஜய், இன்று (ஜூலை 13) லயோலா மணியிடம் வழங்கினார். அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனும் உடன் இருந்தார்.
இந்த உத்தரவில், “ஆணை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் லயோலா மணி இந்த பதவியை வகிப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக லயோலா மணி செயல்பட்டு வருகிறார்.
தேர்தல் சமயத்தில் இவருக்கு சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீட் வழங்கப்பாடத நிலையில், இதுத்தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், ”அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை என்ற வருத்தம் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக தளபதி விஜய் அவருக்கு நல்ல பொறுப்பையும், நல்ல இடத்தையும் வழங்குவார்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
