”தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் எழுபது அல்லது எண்பது சதவீதம் இருப்பதாக” எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகன் முன்னிலையில் நிகழ்த்தப்படும் பயிற்சி வகுப்புகளுக்கான ஃபேஸ்புக் பக்கம் “முழுமையறிவு”. இதில் இடம் பெற்ற கேள்வியும் ஜெயமோகனின் பதிலும்…
கேள்வி: அன்புள்ள ஜெமோ, நான் நேரடியாகவே உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். அண்மைக் காலத்தில் தவெக அரசு, அதன் அமைச்சர்கள் மற்றும் அவர்கள் மீதான எதிர்வினைகள் குறித்து நீங்கள் விரிவாகப் பல கட்டுரைகளையும் குறிப்புகளையும் எழுதியிருந்தீர்கள். அவற்றின் அடிப்படையில்தான் இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன்.
முக்கியமான கேள்வி இதுதான்.
- திமுகவின் அத்தியாயம் முடிந்துவிட்டது; திராவிடக் கட்சிகளின் காலம் கடந்துவிட்டது என்றொரு கருத்து பரவலாகப் பேசப்படுகிறது.
- அதேபோல், தவெக இன்னும் பல ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என்றும், விஜயை எளிதில் தோற்கடிக்க முடியாது என்றும் கூறப்படுகிறதே. இந்தக் கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?-ஜெ. சந்திரகுமார்.

5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திமுக ஆட்சி
ஜெயமோகன் பதில்: இல்லை. மாறாக, இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் எழுபது அல்லது எண்பது சதவீதம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
அது நிகழாமல் இருக்க வேண்டுமென்றால், சில அசாதாரணமான மாற்றங்கள் இங்கே நிகழ வேண்டும்.
இன்றைய ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளத் தவறுகிற ஒரு விஷயம் இருக்கிறது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் மிகவும் கீழ்மட்டப் பொருளாதார நிலையில் வாழ்ந்தவர்கள். அவர்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்துவதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. அதற்கு அப்பால் இருக்கும் வசதிகளைப் பற்றி அவர்கள் பெரிதாகச் சிந்திக்கவில்லை.
அவர்களுடைய வாழ்க்கையைத் தாங்கிச் செல்ல சில அடையாளப் பற்றுகள் தேவைப்பட்டன. சாதிப்பற்று, ஊர்ப்பற்று, குடும்பப்பற்று போன்றவை அவற்றில் முக்கியமானவை.
அன்றைய காலத்தில் ஒவ்வொரு ஊரிலும் திருவிழாக்கள் மிகுந்த தீவிரத்துடன் கொண்டாடப்பட்டன. திருவிழா தொடங்கிவிட்டால், பத்து நாட்கள் முழுவதும் ஊரிலேயே மக்கள் தங்கியிருப்பார்கள். யார் பெரியவர், யாருக்கு என்ன முன்னுரிமை என்ற போட்டிகளும் சச்சரவுகளும் அந்த விழாக்களின் ஒரு பகுதியாகவே இருந்தன. இவ்வாறான குறுகிய சமூகப் பற்றுகளின் வழியாக மக்கள் வாழ்ந்த காலம் அது.
அந்தச் சூழலில் தலைவர்கள் மீதும், சில அரசியல் சின்னங்கள் மீதும் மிகத் தீவிரமான உணர்வுப்பூர்வமான பற்றுகள் இருந்தன. அதுவே எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களை தொடர்ந்து வெற்றிபெறச் செய்திருக்கலாம். ஆனால் இன்று அந்தச் சூழல் இல்லை.
1990-களின் தொடக்கம்வரை தமிழகம் தொடர்ச்சியான வறுமையிலும் பொருளாதாரப் போராட்டத்திலும் இருந்தது.
1980-களிலிருந்து சுமார் பதினைந்து ஆண்டுகள் வரை, கணிசமான எண்ணிக்கையிலான தமிழர்கள் பிழைப்புத் தேடி இந்தியாவின் பெருநகரங்களுக்கும் கேரளாவுக்கும் இடம்பெயர்ந்தனர். கேரளத்தில் மட்டுமே ஏறத்தாழ அரை கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் இவ்வாறு குடியேறி, அங்கேயே நிரந்தரமாக வாழத் தொடங்கியுள்ளனர். பெங்களூரில் இருபது முதல் முப்பது லட்சம் தமிழர்கள் இருப்பார்கள். கர்நாடகத்தின் பல பகுதிகளைச் சேர்த்துப் பார்த்தால், ஒரு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் அங்கே குடியேறியிருக்க வாய்ப்புண்டு. மும்பைத் தமிழர்களின் குடியேற்றம் அறுபதுகளில் தொடங்கி, எண்பதுகளில் உச்சத்தை அடைந்து, இன்று அந்நகரின் குறிப்பிடத்தக்க மக்கள்தொகையாக வளர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை, தமிழகத்தில் வாழும் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்குக்கு நிகராக இருக்கலாம். இவர்களில் பெரும்பாலானோர் வறண்ட தென்மாவட்டங்களிலிருந்து பிழைப்புத் தேடி வெளியேறி, உணவகத் தொழில், உடலுழைப்புத் தொழில்கள் போன்றவற்றில் ஈடுபட்டு அங்கங்கே வேரூன்றிவிட்டவர்கள். என் பயணங்களில் அவர்களை அடிக்கடி சந்திப்பதுண்டு. அவர்களில் பலருக்கு குலதெய்வ வழிபாட்டைத் தவிர தமிழகத்துடன் வேறு உறவு எதுவும் இல்லை.
இந்த வறுமைச் சூழலிலிருந்து தமிழகம் முன்னேறத் தொடங்கியது புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான். ராஜீவ் காந்தி தொடங்கிய அந்த மாற்றங்களை நரசிம்மராவ் முன்னெடுத்தார். அதன் விளைவாக தமிழகத்தில் தொழில் வளர்ச்சி வேகமடைந்தது.
குறிப்பாக கொங்கு மண்டலத்தின் பல்வேறு தொழில்கள் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கின. கரூரின் வண்டி உடல்கட்டும் தொழில், கோவையின் சிறு பொறியியல் தொழில்கள், திருப்பூரின் பின்னலாடை மற்றும் சாயப்பட்டறைத் தொழில்கள், ஈரோட்டின் நெசவுத் தொழில், நாமக்கலின் கோழிப்பண்ணைத் தொழில் என நீண்ட பட்டியலைச் சொல்லலாம்.
இவை அனைத்தும் ஏற்கனவே தொழில் செய்து வந்த தமிழகத் தொழில்முனைவோர், அரசு கட்டுப்பாடுகள் தளர்ந்தபின் புதிய பொருளாதாரக் கொள்கையின் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி உருவாக்கிய வளர்ச்சியாகும். இதில் தமிழக அரசியல்வாதிகளுக்கு எந்தப் படைப்பாற்றலான பங்கும் இல்லை. மாறாக, இந்த வளர்ச்சியில் பங்குபெறும் ஒரு சுரண்டல் தரப்பாகவே பெரும்பாலான அரசியல்வாதிகள் செயல்பட்டனர் என்பதே உண்மை.
இன்று அந்த வளர்ச்சிக்கான புகழை அனைவரும் தங்களுக்கே உரிமை கோருகிறார்கள்.
இன்று தமிழகம் முழுவதும் ஒரு வலுவான நடுத்தர வர்க்கம் உருவாகியுள்ளது. நடுத்தர வர்க்கம் உருவானவுடன் மக்களின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்குகின்றன. அவர்கள் தங்களைவிட மேலிருக்கும் பொருளாதார நிலையை நோக்கி முன்னேற விரும்புகிறார்கள். இதுவே அடித்தட்டு மக்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடு.
நடுத்தர மக்கள் தொடர்ந்து சேமிப்பார்கள்; புதிய பொருட்களை வாங்குவார்கள்; அடுத்த பொருளாதார நிலையை அடைவதற்கான திட்டங்களோடு வாழ்வார்கள்.
இந்த நடுத்தர வர்க்கத்தின் எதிர்பார்ப்புகளை ஒரு அரசு எளிதில் பூர்த்தி செய்ய முடியாது. அவர்களுக்கு இலவசங்களும் வேண்டும்; தேர்தல் நேரத்தில் பணமும் வேண்டும்; அதுவும் கணிசமான அளவில் வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் சாலை, குடிநீர், மின்சாரம், சுகாதாரம், கல்வி, நிர்வாகம் என எல்லாத் துறைகளிலும் உயர்தர வசதிகளையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வாக்கு சேகரிக்கும்போது பணத்தை அள்ளி வீசினால் மக்கள் மகிழ்ச்சியுடன் வாக்களித்து, அடுத்த ஐந்து ஆண்டுகள் எந்தக் கேள்வியும் கேட்காமல் ஊழலையும் வளர்ச்சியின்மையையும் சகித்துக்கொள்வார்கள் என்று தமிழக அரசியல்வாதிகள் நீண்டகாலமாக நம்பியிருந்தார்கள். அது தவறான கணிப்பு என்பது இன்று தெளிவாகிவிட்டது.
மக்கள் தொடர்ந்து மேலும் வளர்ச்சியையே எதிர்பார்ப்பார்கள். நல்ல சாலைகள் அமைக்கப்பட்டால் இன்னும் நல்ல சாலைகளை விரும்புவார்கள். சுகாதாரத் துறையில் மக்களின் எதிர்பார்ப்பு இன்று உச்சத்தில் உள்ளது. தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் சென்றாலும், “குப்பையே அள்ளுவதில்லை” என்ற குறையை கேட்க முடிகிறது. மின்சாரத் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குடிநீரின் தேவையும் அதற்கேற்ப உயர்கிறது. அரசின் நிர்வாகமும் மிக வேகமாக இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஒரு பட்டா மாறுதலுக்கே ஆறு மாதங்கள் காத்திருந்த காலம் இருந்தது. இன்று ஒரு வாரம் தாமதமானால்கூட மக்கள் கடும் அதிருப்தி அடைகிறார்கள்.
சாலை, சுகாதாரம், மின்சாரம், குடிநீர் மற்றும் அரசு நிர்வாகம் ஆகிய துறைகளில் கண்கூடாகத் தெரியும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை வழங்கும் கட்சியே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும்.

ஆனால் இன்றைய தவெக அரசு அதற்காக என்ன திட்டமிட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அந்த இலக்குகளை எவ்வாறு அடையப் போகிறது என்பதும் வெளிப்படையாக இல்லை. ஆட்சிக்கு வந்த பிறகு சில நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்வதைத் தவிர, மக்களின் எதிர்பார்ப்புகளின் உண்மையான அளவை அவர்கள் புரிந்துகொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
மக்களின் எதிர்பார்ப்பு மிக விரைவாக அதிருப்தியாக மாறிவிடும். அப்போது எதிர்க்கட்சி அந்த அதிருப்தியை அரசுக்கு எதிரான வாக்காக மாற்றிவிடும். மக்கள் நேரடியாக எதிர்த்தரப்புக்கு வாக்களிப்பார்கள். அந்த அரசும் பின்னர் இதே தவறுகளைச் செய்து ஊழலிலும் செயலின்மையிலும் சிக்கிக்கொள்ளும். அதன் பிறகு மீண்டும் விஜய்க்கு வாய்ப்பு உருவாகலாம்.
கேரளத்திலும் இதே நிகழ்வைப் பார்க்கலாம். அங்கு காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இடதுசாரி அரசு இந்தியாவின் பல மாநில அரசுகளைவிடச் சிறப்பாக நிர்வாகம் செய்தது என்று சொல்லலாம்.
இருந்தபோதிலும், தொடர்ந்து உயர்ந்துகொண்டே சென்ற நடுத்தர வர்க்கத்தின் எதிர்பார்ப்புகள் அந்த அரசின் சாதனைகளையும் மீறியதால் அது தோல்வியடைந்தது.
தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் அரசுக்கும் இதே நிலை ஏற்பட்டது. பல வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு வலுவான அடித்தளம் அமைத்த அந்த அரசையும், நடுத்தர வர்க்கத்தின் உயர்ந்த எதிர்பார்ப்புகளே தோற்கடித்தன. இன்று அங்கிருக்கும் காங்கிரஸ் அரசு இந்தியாவிலேயே மோசமான ஆட்சிகளில் ஒன்று.
கேரளத்தில் வி.டி.சதீசனின் அரசு அதைவிட மோசமாக நிகழும் என்பதற்கான எல்லா சான்றுகளும் தெரிகின்றன.
ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்கு வந்த பிறகு, அதிகாரம் தரும் மரியாதை, வசதிகள் ஆகியவற்றில் மூழ்கத் தொடங்குகிறார்கள். அன்றாட நிர்வாகச் சிக்கல்களிலேயே சிக்கிக்கொண்டு, தாங்கள் தீவிரமாக உழைக்கிறோம் என்ற பிரமையை உருவாக்கிக்கொள்கிறார்கள். கட்சியின் உட்பூசல்களைச் சமாளிப்பதிலேயே தலைமையின் பெரும்பாலான ஆற்றல் செலவாகிறது.
அதற்கும் மேலாக, கீழ்மட்டத் தொண்டர்கள் “நிரந்தர முதல்வர்”, “மாறாத தலைவர்”, “மக்களின் ஒரே தலைவர்” என்ற பிம்பத்தை போஸ்டர்களாலும் நேரடித் துதிகளாலும் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அதன் விளைவாக, தங்களை யாராலும் தோற்கடிக்க முடியாது; மக்கள் தங்களை வழிபடுகிறார்கள் என்ற கற்பனையை ஆட்சியாளர்கள் நம்பத் தொடங்குகிறார்கள்.
ஆனால் மக்களின் பெருகிக்கொண்டே செல்லும் எதிர்பார்ப்புகளை எவ்வாறு சந்திப்பது என்பதற்கான திட்டங்கள் உருவாகாமல் போய்விடுகின்றன.

அதனால்தான் இந்தியா முழுவதும் பெரும்பாலும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறிக்கொண்டே இருக்கிறது. தமிழகத்திலும் அதுவே நிகழ வாய்ப்பு அதிகம். இவ்வாறு எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.
