திமுகவில் விசிக முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபுவை சேர்த்ததற்கு அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் நேற்று நடைபெற்ற விசிக நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசுகையில், அந்த தம்பி (பனையூர் பாபு) திமுகவில் சேர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தால், அவரிடம், ”திருமாவளவன் எங்களுக்கு நம்பிக்கைக்குரியவராக எங்களோடு நீண்ட காலம் பயணித்தவர்.
அந்த இயக்கம் ஒரு விளிம்புநிலை மக்களுக்கான இயக்கம். அந்த இயக்கத்தை நாங்கள் பலவீனப்படுத்தமாட்டோம். விசிகவினர் எங்களுக்காக வாதிட்டு இருக்கிறார்கள், எங்களுக்காக போராடி இருக்கிறார்கள், எங்களுக்காக துணை நின்று இருக்கிறார்கள். திருமாவளவன் எங்களுக்கு மிகவும் நெருக்கமாகவும், நம்பிக்கைக்குரியவராக இருந்திருக்கிறார். சாதாரண மக்களை அமைப்பாக்கி, இந்த அளவுக்கு அந்த அமைப்பை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை பலவீனப்படுத்துவதற்கு ஒருபோதும் நாங்கள் இடம் தரமாட்டோம்” என்று மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்க வேண்டும். இதான் அரசியல் அறம்.
ஆனால், விடுதலை சிறுத்தைகளை பலவீனப்படுத்துவதற்கும் எங்களால் முடியும் என்று, ஒரு நிலைப்பாட்டை, நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ள திமுக எடுத்த போது தான், எனக்கு காயம் ஏற்பட்டது” என்றார்.
