அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ மாநாடு: 6 முக்கிய தீர்மானங்கள் விவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவர், அந்த கட்சியில் இருந்து கடந்த ஜூன் மாதம் விலகி ‘வீ த லீடர்ஸ்’ என்ற புதிய இயக்கத்தை உருவாக்கி உள்ளார். இதில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (ஜூலை 12) அண்ணாமலை தொடங்கி உள்ள வீ த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநில மாநாடு கோவை பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தீர்மானம் 1

போதைக்கெதிரான நமது இயக்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு ஒவ்வொரு ஜூலை மாதமும் “White Band மாதமாக” கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT

போதைக்கெதிரான இம்மாதத்தில் “நான் ஒரு போதும் போதைப்பொருளைப் பயன்படுத்த மாட்டேன்; மற்றவர்களையும் போதைப்பொருளைப் பயன்படுத்துவதிலிருந்து காப்பேன்” என்ற உறுதியோடு செயல்படுவோம்.

மேலும், White Band இயக்கத்தை தமிழ்நாட்டின் மாபெரும் விழிப்புணர்வு இயக்கமாக உருவாக்கி, போதையில்லா தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம் என இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

ADVERTISEMENT

தீர்மானம் 2

தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், ஆன்மிக வழிபாட்டுத் தளங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் 717 டாஸ்மாக் கடைகள் மட்டுமே செயல்படுவதாகக் கூறி அவை மூடப்பட்டுள்ளன.

ஆனால் நாம் தலைநகரான சென்னையின் சில பகுதிகளில் நடத்திய கள ஆய்வில், பல கடைகள் கல்வி நிறுவனங்கள், ஆன்மிக வழிபாட்டுத் தளங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் தடையின்றி டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. தமிழக அரசு மீண்டும் ஒரு முறை ஆய்வு மேற்கொண்டு, இது போன்ற டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி இந்த மாநாடு தீர்மானம் நிறைவேற்றுகிறது.

தீர்மானம் 3

பள்ளி மற்றும் உயர்கல்வித் துறைகளில் போதைப்பொருள் எதிர்ப்பு குழுக்கள் உருவாக்கும் அரசாணை கடந்த 2025-இல் வெளியிடப்பட்டது. தற்போது செயல்பாட்டில் இருக்கும் போதைப்பொருள் எதிர்ப்புக் குழுக்களைக் கண்டறிந்து, அரசு உயர்கல்வித் துறையின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இது முறையாகச் செயல்படுத்தப்பட்டதா என அரசு ஆராய்ந்து, அதன் செயல்பாட்டு நிலை, அதன் தாக்கம் பற்றிய தகவல்களை விளம்பரப்படுத்த வேண்டும்.

போதைப்பொருள் எதிர்ப்புக் குழுக்கள் இல்லாத பள்ளி மற்றும் கல்லூரிகளில் அடுத்த 3 மாதங்களில் போதைப்பொருள் எதிர்ப்புக் குழுக்களை உருவாக்கி, அதன் செயல்பாட்டை அரசு உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 4

வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் மற்றும் இளைஞர்கள் காலை நேரத்திலேயே மதுபானம் அருந்தும் நிலையைத் தடுக்கவும், பணியிட ஒழுக்கம், உற்பத்தித் திறன் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கள்ளச்சந்தை மதுபான விற்பனையை முற்றிலும் தடுப்பதோடு, கஞ்சா மற்றும் செயற்கை போதைப்பொருள்கள் தமிழகத்தில் இல்லாத நிலை உண்டாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுகிறது.

தீர்மானம் 5

அரசு அனுமதி பெற்ற FL2 மதுபானக் கடைகள், அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமம் மற்றும் அனுமதிக்கப்பட்ட செயல்பாட்டு வரம்புகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்து, அவற்றை மீறி சாதாரண சாராயக் கடைகளைப் போல செயல்படும் நடைமுறைகளை முற்றிலும் தடுக்க வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சமூக நலன் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இனி புதிய FL2 உரிமங்கள் எதையும் வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி இம்மாநாடு தீர்மானம் நிறைவேற்றுகிறது.

தீர்மானம் 6

போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதோடு, மாவட்டந்தோறும் போதைத் தடுப்புக் குழுக்களை உருவாக்கி, கல்வி நிறுவனங்களில் போதைக்கு எதிரான விழிப்புணர்வுக் கல்வியை ஒருங்கிணைக்க வேண்டும்.

மறுவாழ்வு மையங்களை விரிவுபடுத்துவதோடு, மறுவாழ்வு மற்றும் சமூக மறு ஒருங்கிணைப்பிற்காக அரசு-தனியார் கூட்டமைப்புகளை உருவாக்கி, மறுவாழ்வு பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தர வேண்டும்.

தொழில்நுட்பம் மற்றும் குடும்பங்களை மையமாகக் கொண்ட போதைப்பொருள் தடுப்புத் திட்டங்களை மாநிலம் முழுவதும் செயல்படுத்த வேண்டும்.

இறுதியில், இத்திட்டங்களின் பலன்களை மதிப்பீடு செய்து, வரும் ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டை போதைப்பொருள் ஒழிப்பில் தேசிய முன்னோடி மாநிலமாக மாற்ற, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share