திமுக கூட்டணியை பாதுகாத்த திருமாவளவன் எதிரியா?

Published On:

| By Pandeeswari Gurusamy

“திமுக – காங்கிரஸ் கூட்டணியை 2009-ஆம் ஆண்டிலிருந்து பாதுகாத்த விசிக இன்று சிலருக்கு எதிரியாக மாறிவிட்டதா” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “முன்னாள் முதல்வர் கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் வைத்தால், அதை உடைப்போம் என்று வெளிப்படையாகப் பேசியவர்கள் இருக்கிறார்கள். இங்கே அத்தகைய வெறுப்பு அரசியல் நிலவுகிறது. ஆனால், இன்றைக்கு அவர்கள் ஒரே மேடையில், ஒரே நிகழ்ச்சியில் கூடி குலவுகிறார்கள், கொஞ்சிக் கொள்கிறார்கள். அது எல்லாம் இங்கு விவாதப் பொருளாக மாறவில்லை.

ADVERTISEMENT

கலைஞரின் பேனா சின்னம் வைத்தால் நானே உடைப்பேன் என்று சொன்னவரை இன்றைக்குப் பொது வேட்பாளராக நிறுத்தப் போகிறார்களாம். ஆனால், இந்தத் திருமாவளவன் மட்டும் இன்று எதிரியாகிவிட்டானாம்” என்று சாடினார்.

தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடித்தது குறித்துப் பேசிய அவர், “கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றிருந்த காரணத்தினாலேயே, உலகமெங்கும் வாழும் உலக தமிழர்களால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான பாவத்தைச் சுமந்தவன் இந்தத் திருமாவளவன்.

ADVERTISEMENT

அன்றைய காலகட்டத்தில் மருத்துவர் ராமதாஸ், ஐயா நெடுமாறன், தோழர் தா.பாண்டியன், அண்ணன் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, ‘நீங்கள் ஒருவர்தான் இன்னும் திமுக கூட்டணியில் இருக்கிறீர்கள். நீங்கள் மட்டும் வெளியே வந்துவிட்டால், இந்தத் தேர்தலிலேயே திமுகவை ஒழித்துவிட முடியும்’ என்று என்னிடம் வெளிப்படையாகவே கூட்டாக சேர்ந்து கூறினார்கள். இதையெல்லாம் இன்றைக்குச் சொல்ல வேண்டிய தேவை எனக்கு வந்திருக்கிறது” என்றார்.

உலகளாவிய அரசியல்

முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் குறித்துப் பேசிய திருமாவளவன், “முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு திமுகவும் காங்கிரசும்தான் காரணம் என்று அன்றைக்குப் பிற தலைவர்கள் பேசினார்கள். ஆனால், ஈழ அரசியலை வெறும் தமிழ்நாட்டு தேர்தல் அரசியலோடு பொருத்திப் பார்க்கக் கூடாது என்று சொன்னவன் நான். ஈழத்தில் நடந்த அவலங்களுக்குத் தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியல் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. அது உலகளாவிய அரசியல்.

ADVERTISEMENT

அதில் அமெரிக்காவுக்கும், அதன் அடிவருடி நாடுகளுக்கும் தொடர்பு இருந்தது. ஏறத்தாழ 22, 23 நாடுகள் ஒன்று சேர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றாக அழித்தொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் நின்றன. ஆனால், ஒட்டுமொத்தப் பழியையும் தேர்தல் அரசியலுக்காகக் கலைஞர் மீது மட்டுமே போட முயற்சித்த காலம் தான் 2009″ என்பதையும் சுட்டிக் காட்டினார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share