“ஜெயிலுக்கு அனுப்புவியோ..?” முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜூனாவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் சவால்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், சாத்தான்குளத்தில் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ஆவேசமாக உரையாற்றினார்.

அவர் பேசியதாவது, “இன்று நம்மை வீழ்த்தப் பல வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. நம் தலைவர் மு.க.ஸ்டாலினை வீழ்த்த நினைப்பவர்கள் யாரென்று பார்த்தால், மாலை 6 மணிக்கு வீட்டுக்குச் சென்றுவிட்டு அடுத்த நாள் காலை 10 மணிக்கு எழுபவர்கள் தான். வெளியில் என்ன நடக்கிறது என்று கூட அவர்களுக்குத் தெரியாது. தமிழ்நாட்டில் யார் இருக்கிறார், யார் போனார், மக்களுக்கு நாம் என்ன செய்தோம் என்ற விவரம் எதுவும் அவர்களுக்குத் தெரிவதில்லை.

ADVERTISEMENT

கரூரில் ஒரு கூட்டத்தில் பேசும்போது அங்கிருந்து ஒரு பேப்பரை எடுத்து அப்படியே வாசிக்கிறார் விஜய். சினிமாவில் நடிப்பது போலவே அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்தச் சினிமா வேடமெல்லாம் அரசியலில் எடுபடாது. மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், சினிமா மோகத்தைக் காட்டி ஏமாற்றிவிடலாம் என்ற நிலையில் தான் அவர் உள்ளார். விஜய் எப்படி நடக்க வேண்டும் என்று அவருக்குப் பின்னால் இருந்து சொல்வதே ஆதவ் அர்ஜுனா தான்.

அடுத்து வரும் உள்ளாட்சி மன்றத் தேர்தல், புதிய வரலாற்றை உருவாக்கும் காலமாக அமையும். அப்போது அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்ற வரலாற்றை நாம் உருவாக்க வேண்டும். காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் எங்கு போட்டியிட்டாலும் சரி, இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் யாரை ஆதரிக்கிறாரோ அவர்தான் வெற்றி பெறப் போகிறார்.

ADVERTISEMENT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஈடாகவோ, இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஈடாகவோ இங்கு வேறு எந்தத் தலைவரைக் கூற முடியும்? அதேபோல், கனிமொழி எம்பியைப் போல நாடாளுமன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் யாராவது உண்டா?

நான் மேடையில் பேசியதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய முயன்றார்கள். ஆனால், நான் உடனே முன்ஜாமீன் பெற்றேன். ஆதவ் அர்ஜுனா இங்குள்ள காவல் துறைக்குத் தொடர்பு கொண்டு, என்னை ஒரு மாதம் சிறையில் வைக்குமாறு கூறியுள்ளார். ஐந்து வருடங்கள் என்னைச் சிறையில் வைத்தாலும், எந்தக் கொம்பனாலும் திமுகவை அசைக்க முடியாது. என்னை ஜெயிலில் வைத்துவிடுவாயா? உங்கள் ஆட்சி அதிகாரம் எத்தனை நாட்கள் இருக்கும் என்று ஒவ்வொரு நாளும் எண்ணப்படுகிறது. இன்றைக்கு திமுக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்பதை வரும் உள்ளாட்சித் தேர்தலில் நாம் நிரூபித்துக் காட்டுவோம்.”

ADVERTISEMENT

இவ்வாறு அனிதா ராதாகிருஷ்ணன் மிக ஆக்ரோஷமாகப் பேசினார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share