ஈபிஎஸ் VS சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் மோதல்: செஞ்சி அருகே பதற்றம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே எடப்பாடி பழனிசாமி, சிவி சண்முகம் தரப்பு ஆதரவாளர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வல்லம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு இன்று (ஜூலை 11) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிமுக மாவட்ட செயலாளரும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான பசுபதி தலைமையில் இந்த கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இக்கூட்டத்திற்கு மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சி.வி.சண்முகத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள், தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வல்லம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினரை அழைக்காமல் கூட்டம் நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக இன்று காலை முதலே அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வந்தது.

வாக்குவாதம் மற்றும் கைக்கலப்பு

இந்நிலையில், மாவட்ட செயலாளர் பசுபதி கூட்டரங்கிற்கு வருகை தந்தார். அப்போது திருமண மண்டபத்தின் நுழைவாயில் எதிரே திரண்ட சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள், அவருக்கு குறுக்காக நின்று பசுபதிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைக்கலப்பாக மாறியது.

ADVERTISEMENT

இதில் சிவி சண்முகம் ஆதரவாளர்கள் பசுபதியின் கார்மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதில் அவரது கார் சேதம் அடைந்தது.

இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.

ADVERTISEMENT

பூட்டை உடைத்து உள்ளே சென்ற தொண்டர்கள்

மோதல் தீவிரமடைந்ததை அடுத்து, சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் திருமண மண்டபத்தின் பிரதான வாயிலை பூட்டினர். இதனால் உள்ளே செல்ல முடியாமல் மாவட்ட செயலாளர் பசுபதி வெளியே நின்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மோதலில் ஈடுபட்ட கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். அதே நேரத்தில், பசுபதியின் ஆதரவாளர்கள் திருமண மண்டபத்தின் கிரில் பூட்டை அதிரடியாக உடைத்துக் கொண்டு கூட்டரங்கிற்குள் நுழைந்தனர்.

அதிமுக உள்கட்சி கோஷ்டி மோதல் மீண்டும் வெடித்துள்ளது வல்லம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share